Published : 20 Dec 2013 12:00 AM
Last Updated : 20 Dec 2013 12:00 AM

அரசு நூலகங்களுக்கு புதிய நூல்கள் வாங்க முடிவு

அரசு நூலகங்களுக்கு புதிதாக நூல்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிப்பகங்கள் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக பொது நூலக இயக்குநரும் (கூடுதல் பொறுப்பு), பள்ளிக்கல்வி இயக்குநருமான வி.சி.ராமேஸ்வர முருகன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:-

விண்ணப்பிப்பது எப்படி?

தமிழக அரசின் பொதுநூலக இயக்ககத்தின் கீழ் செயல்படும் பொது நூலகங்களுக்கு நூலக நிதி மற்றும் ராஜாராம் மோகன்ராய் நூலக அறக்கட்டளை நிதி உதவியில் இருந்து 2012 மற்றும் 2013-ம் ஆண்டு பதிப்பு செய்யப்பட்ட தமிழ், ஆங்கில நூல்கள் வாங்கப்பட உள்ளன.

இதற்கான விண்ணப்பங்களை பொது நூலக இயக்ககம் பெற இருக்கிறது. விண்ணப்ப படிவங்களை (படிவம்-ஏ, பி, சி என 3 படிவங்கள்) கன்னிமாரா நூலகத்தின் இணையதளத்தில் (www.connemarapubliclibrarychennai.com) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். படிவங்களை பூர்த்திசெய்வது தொடர்பான வழிமுறைகளும் இந்த இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.

கடைசி நாள்

விண்ணப்பிக்க விரும்பும் பதிப்பகங்கள் 3 படிவங்களையும் பூர்த்தி செய்து நூல் தலைப்பு ஒன்றுக்கு பதிவுகட்டணமாக ரூ.100 வீதம் இந்தியன் வங்கியின் ஏதாவது ஒரு கிளையில் பொது நூலக இயக்கக கணக்கில் செலுத்தி அந்த தொகைக்கான அசல் செலானை வெள்ளைத்தாளில் ஒட்டி, அதில் பதிப்பக முத்திரையுடன் படிவம்-ஏ உடன் இணைத்து மாதிரி பிரதி நூல்களுடன் அந்தந்த மாவட்ட நூலக ஆணைக்குழுவின் அலுவலகத்தில் ஜனவரி 20-ம் தேதிக்குள் அலுவலக வேலை நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

சமர்ப்பிக்கப்படும் ஒவ்வொரு பதிப்பகத்துக்கும் தனித்தனியே படிவம்-பி-யை பூர்த்திசெய்து வழங்க வேண்டும். படிவம்-ஏ-யை பொருத்தவரையில், ஒவ்வொரு பதிப்பகமும் ஒரு பிரதி மட்டும் பூர்த்தி செய்து அளித்தால் போதுமானது. படிவம்-சி என்பது பதிப்பகம் மூலம் சமர்ப்பிக்கப்படும் நூல்கள் தொடர்பானது ஆகும். இதுதொடர்பாக கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டால் 044-28524263 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x