Published : 20 Mar 2014 08:02 PM
Last Updated : 20 Mar 2014 08:02 PM

விஷவாயு கசிவு, துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் உயிரிழப்பு: ஜெயலலிதா நிவாரண நிதி அறிவிப்பு

ஈரோடு சிப்காட் தொழிற்சாலை கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 7 தொழிலாளர்கள் மற்றும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த தொழிலாளி ராஜ்குமார் ஆகியோரது குடும்பத்தினருக்கு முதல்வர் ஜெயலலிதா தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் கடந்த 17-ம் தேதி மத்தியப் பாதுகாப்பு படை வீரருக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்துவந்த தொழிலாளி ராஜா (எ) ராஜ்குமார் இடையே ஏற்பட்ட தகராறில் மத்தியப் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டதில் ராஜ்குமார் இறந்தார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் இயங்கிவரும் தனியார் சாயத் தொழிற்சாலை சுத்திகரிப்பு மையத்தின் கழிவுநீர் தொட்டியில் கடந்த செவ்வாய்க்கிழமை மின்மோட்டார் பழுது சரிசெய்ய இறங்கிய ஆனந்த், பீர்பகதூர், ஷிபா, சசிகுமார், முருகன், மதன்குமார், சுதாகர் ஆகிய 7 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி இறந்தனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால், விருப்ப நிதியில் இருந்து அமைச்சர்கள், இதர அலுவலர்கள் எந்தவித மானியமோ, தொகையோ வழங்கக் கூடாது என உள்ளது. ஆனாலும், முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து விபத்துகள், இயற்கை இடர்ப்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கத் தடையேதும் இல்லை என தமிழக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.

இதன் அடிப்படையில் 8 தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கும் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.1 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x