காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க கோரி மனு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க கோரி மனு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி
Updated on
1 min read

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க உத்தரவிடக் கோரி ஓய்வுபெற்ற பேராசிரியை சரஸ்வதி கோவிந்தராஜ் தாக்கல் செய்த பொது நல மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. விபரம் வருமாறு: இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற போரின்போது சர்வதேச விதிமுறைகளை மீறி ஏராளமான மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் இலங்கை அரசு ஈடுபட்டது. அங்கு நடைபெற்ற நடவடிக்கைகள் அனைத்தும் ஒரு இனப் படுகொலைபோல் நடைபெற்றன. இந்நிலையில், வரும் நவம்பர் மாதம் அங்கு காமன்வெல்த் மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்றால், இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை நாமும் அங்கீகரித்தது போல ஒரு தவறான கருத்தை உருவாக்கிவிடும். இலங்கையில் நடைபெறும் அந்த மாநாட்டை இந்திய அரசு புறக்கணிக்க வேண்டும். கடந்த செப்டம்பர் 10-ம் தேதி மத்திய அரசுக்கு நாங்கள் கோரிக்கை மனு அனுப்பினோம். அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு மீது விசாரணை மேற்கொண்ட தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வு, மனுவைத் தள்ளுபடி செய்து செவ்வாயன்று தீர்ப்பளித்தது. இலங்கைத் தமிழர்களின் துயரங்கள் குறித்து மனுதாரர் கூறியுள்ள கருத்துகளை இந்த நீதி மன்றம் குறைத்து மதிப்பிடவில்லை. இந்த விவகாரத்தில் வெளியுறவு அமைச்சகத்துக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு நிர்பந்தம் செய்யும் சட்டபூர்வ உரிமை எதுவும் மனுதாரருக்கு இல்லை என்பதால் அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in