Published : 09 May 2016 04:20 PM
Last Updated : 09 May 2016 04:20 PM

அதிமுக, திமுகவினரின் பண விநியோகத்தை தடுக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

'அதிமுகவும், திமுகவும் மக்களுக்கு பணத்தைக் கொடுத்து அவர்களின் வாக்குகளை விலைக்கு வாங்குவது அருவருக்கத்தக்க மோசமான கலாச்சாரம். இதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும்' என்று பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில், அதிமுகவும், திமுகவும் போட்டிப்போட்டுக் கொண்டு பண விநியோகத்தை தொடங்கியுள்ளன. வழக்கம் போலவே தேர்தல் ஆணையம் இதை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை கொள்கை அடிப்படையிலும், கடந்த காலங்களில் மேற்கொண்ட சாதனைகளின் அடிப்படையிலும் எதிர்கொள்வது தான் அரசியல் கட்சிகளுக்கு அழகாகும். ஆனால், சொல்வதற்கு கொள்கையோ, சாதனைகளோ இல்லாத நிலையில் பணத்தின் உதவியுடன் தேர்தலை சந்திக்கும் நிலைக்கு அதிமுகவும், திமுகவும் தள்ளப்பட்டிருக்கின்றன. அதிமுக சார்பில் ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், திமுகவிலும் அதே அளவு தொகை ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

இந்தத் தொகை ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள கிளைகள் வாரியாக கொண்டு செல்லப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அவை இரவு நேரத்தில் ஒவ்வொரு வீடாக கொண்டு செல்லப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஒரே இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தால் அதிகாரிகளுக்கு தெரிந்து விடக்கூடும் என்பதால் பணத்தை பிரித்து பல இடங்களில் பதுக்கி வைத்துள்ளனர். பணக்கார நிர்வாகிகள், பெரிய பதவிகளில் உள்ள நிர்வாகிகள் வீட்டில் பதுக்கி வைத்திருந்தால், அதிகாரிகளுக்கு தெரிந்து பறிமுதல் செய்யப்படலாம் என்பதால் இரு கட்சிகளிலுமே கிளை நிர்வாகிகள் வீடுகளில் தான் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் எந்த தொகுதியிலும் அதிமுகவோ, திமுகவோ மக்களை சந்தித்து கொள்கைகளைக் கூறி வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபடவில்லை. மாறாக தொகுதியில் உள்ள வாக்காளர்கள் அனைவருக்கும் பணத்தைக் கொடுத்து வாங்கி விடலாம் என்ற எண்ணத்தில் பணம் விநியோகிக்கும் வேலையில் தான் ஈடுபட்டிருக்கின்றனர். இதற்காக ஒவ்வொரு தெருவிலும் எத்தனை வாக்காளர்கள் உள்ளனர்; அவர்களின் அரசியல் நிலைப்பாடு என்ன?; யாருடைய வாக்குகளையெல்லாம் பணம் கொடுத்து வாங்கலாம் என்பதை இரு கட்சிகளும் கணக்கெடுத்து வைத்துள்ளன.

அதனடிப்படையில் 25 வாக்குகளுக்கு ஒரு நிர்வாகி வீதம் நியமிக்கப்பட்டு அவர்கள் மூலம் பொதுமக்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் நெருக்கத்தில் கண்காணிப்பு அதிகமாக இருக்கும் என்பதால், அதற்கு முன்பாகவே பண விநியோகத்தை முடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன.

தமிழகத்தை 50 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் அதிமுகவும், திமுகவும் சாதனைகளைக் கூறி வாக்கு சேகரிப்பதற்கு பதிலாக மக்களுக்கு பணத்தைக் கொடுத்து அவர்களின் வாக்குகளை விலைக்கு வாங்குவது அருவருக்கத்தக்க மோசமான கலாச்சாரம் ஆகும்.

வாக்குகளை விலை கொடுத்து வாங்கும் கலாச்சாரத்தை 2005 ஆம் ஆண்டில் கும்மிடிப்பூண்டி, காஞ்சிபுரம் இடைத்தேர்தலில் அறிமுகம் செய்து வைத்தது அதிமுக தான். அதன்பின் திருமங்கலம் இடைத்தேர்தலில் இந்த கலாச்சாரத்தை பிரமாண்டமாக மாற்றியது திமுக. இப்போது இரு கட்சிகளின் அடிப்படை பணியாக மாறிவிட்டது இந்த கலாச்சாரம்.

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படுவதில்லை. அத்தகைய குறைகளை கண்டறிந்து சரி செய்வதற்காக 25 வாக்காளர்களுக்கு ஒருவர் என்ற கலாச்சாரத்தை திமுகவும், அதிமுகவும் கடைபிடித்திருந்தால் தமிழகம் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக முன்னேறியிருந்திருக்கும். ஆனால், அதை செய்யாத திராவிடக் கட்சிகள், வாக்குக்கு லஞ்சம் கொடுப்பதற்கு மட்டும் இப்படி ஒரு கட்டமைப்பை உருவாக்கியிருப்பது வெட்கப்பட வேண்டிய செயலாகும். ஆனால், இரு திராவிடக் கட்சிகளும் இதற்காக வெட்கப்படாது.

தேர்தலில் அனைத்து கட்சி வேட்பாளர்களுக்கும் சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமையாகும். வாக்காளர்களுக்கு பணம் தரப்படுவதை தடுத்தும், வாக்காளர்களுக்கு தருவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பணத்தை பறிமுதல் செய்தும் தேர்தல் ஆணையம் அதன் கடமையை நிறைவேற்ற வேண்டும்.

அதேநேரத்தில் திராவிடக் கட்சிகளின் இந்த தந்திரம் இத்தேர்தலில் தமிழக மக்களிடம் எடுபடாது. மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல், அவர்களின் வாக்குகளை விலைகொடுத்து வாங்கி விடலாம் என்ற அதிமுக, திமுகவுக்கு இத்தேர்தலில் மக்கள் பாடம் புகட்டப்போவது உறுதி. அதை வரும் 19-ம் தேதி இக்கட்சிகள் உணரும்'' என்று அன்புமணி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x