Published : 12 Apr 2016 10:51 AM
Last Updated : 12 Apr 2016 10:51 AM

விருத்தாச்சலம் சம்பவம்: வைகோ, ராமதாஸ் கண்டனம்

தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் விருத்தாசலம் தேர்தல் பொதுக்கூட்டத்தில் வெயிலில் மயங்கிய 2 பேர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவத்துக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?- வைகோ

வைகோ வெளியிட்டுள்ள கண்டனச் அறிக்கையில், "விருத்தாசலத்தில் முதல்வர் ஜெயலலிதா உரை ஆற்றிய பிரச்சாரக் கூட்டத்தில் சிலர் மயங்கி விழுந்து உயிரிழந்தனர் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.

இறந்தவர்கள் குடும்பத்திற்குப் பத்து லட்சமும், காயமுற்றோருக்கு ஒரு லட்சமும் அண்ணா தி.மு.க. கட்சியில் இருந்து வழங்க வேண்டும்.

முதல்வர் பொதுக்கூட்டத்திற்குச் சென்று பரிதாபமாக உயிர் நீத்தவர்களின் குடும்பத்தினருக்கு, தேமுதிக மக்கள் நலக் கூட்டணி த.மா.கா இணைந்த கூட்டணியின் சார்பில் எனது கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்வதுடன், பாதிக்கப்பட்டோருக்குத் தக்க சிகிச்சை அளிக்க வலியுறுத்துகிறேன்.

முதல்வர் கலந்து கொண்ட விருத்தாசலம் பொதுக்கூட்டத்தில் சிலர் உயிர் இழக்கவும், பலர் உடல் நலிவுறவும் காரணமான சம்பவம் குறித்துத் தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றது" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

'வெயிலில் பொதுக்கூட்டம் நடத்துவதை தவிர்ப்பீர்'- ராமதாஸ்

கடுமையான வெயிலில் பொதுக்கூட்டங்கள் நடத்துவதை கட்சிகள் தவிர்க்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அப்பாவி மக்கள் இருவரின் உயிரிழப்புக்கும், மேலும் 7 பேரின் உடல்நிலை பாதிப்புக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா தான் பொறுப்பேற்க வேண்டும். 100 டிகிரிக்கும் அதிகமான வெயிலில் சிறிது நேரம் நின்றாலே வலிமையானவர்கள் கூட மயங்கி விழுந்து விடுவார்கள்.

இந்த உண்மை தெரிந்திருந்தும் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், முதியோர், பெண்கள் என பலரையும் 5 மணி நேரம் கொளுத்தும் வெயிலில் அமர்த்தி அதிமுகவினர் கொடுமைப்படுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் அரசியல் கட்சித் தலைவர்களின் பிரச்சாரம் பெரும்பாலும் மாலையில் வெயில் தணிந்த பிறகே நடைபெறுகிறது. குறிப்பாக பொதுக்கூட்டங்கள் இரவில் தான் நடக்கும்.

ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் வசதிக்காக பிற்பகல் 3.00 மணிக்கு பொதுக்கூட்டம் நடத்துவதும், அதற்காக அழைத்து வரப்பட்ட மக்களை விலங்குகளைப் போல பொதுக்கூட்டம் நடக்கும் திடலில் அடைத்து வைப்பதும் மிகப்பெரிய மனித உரிமை மீறல்கள் ஆகும்.

ஜெயலலிதா ஆட்சியிலும், அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலும் மனித உரிமைகள் மீறப்படுவது சர்வ சாதாரணமான விஷயமாகி விட்டது.

கடந்த மக்களவைத் தேர்தலின் போது சிதம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஒருவர் நெரிசலில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போது, அந்த செய்தி ஜெயலலிதாவுக்கு தெரிந்தால் அபசகுனமாகி விடும் என்பதால், ஜெயலலிதா பிரச்சாரத்தை முடித்து விட்டு புறப்படும் வரை அவருக்கு சிகிச்சை தராமல் தாமதித்தனர்.

இதனால் அவர் உயிரிழந்தார். அதேபோன்ற நிகழ்வு தான் இப்போதும் அரங்கேறி இருவர் உயிரிழந்துள்ளனர். மனித உரிமைகளையும், மனித உயிர்களையும் ஜெயலலிதாவும், அவரது அரசும் எப்படி மதிக்கின்றனர் என்பதற்கு இது தான் சிறந்த உதாரணமாகும்.

ஜெயலலிதாவின் அணுகுமுறையும், அவரை மகிழ்விக்க வேண்டும் என்ற எண்ணமும் தான் இதற்கு காரணம் ஆகும். இதுகுறித்து உயர்நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அதிமுக தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

கடுமையான வெயிலில் பொதுக்கூட்டங்கள் நடத்துவதை கட்சிகள் தவிர்க்க வேண்டும்"

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x