

தமிழகம் மற்றும் புதுவையில் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநிலம் மற்றும் தமிழகப் பகுதியை ஒட்டி நிலப்பகுதியில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக கடந்த சில நாள்களாக தமிழகத்தில் மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் இன்றும் தமிழகம் மற்றும் புதுவையில் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னையைப் பொறுத்தவரையில் வானம் மேகமூட்டமாக இருக்கும். சில இடங்களில் மழையோ இடியுடன் மழையோ பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சனிக்கிழமை காலை வரையிலான நிலவரப்படி காஞ்சிபுரத்தில் 60 மி.மீ. மழையும், குன்னூர், வால்பாறை, செங்கல்பட்டில் 40 மி.மீ. மழையும் பெய்துள்ளது. செம்பரம்பாக்கம், திருவள்ளூர், விருதாச்சலம், ஆரணி, குமாரபாளையம், சென்னையில் 30 மி.மீ. மழையும், வாலாஜா, ஏற்காடு, மாதவரம், பவானி, திருத்தணி, மகாபலிபுரம், வேலூரில் 20 மி.மீ. மழையும் பெய்துள்ளது.
திருவாலங்காடு, தாம்பரம், அரக்கோணம், குழித்துறை, ஓமலூர், ஸ்ரீபெரும்புதூர், புதுக்கோட்டை, விழுப்புரம், மேட்டுப்பாளையம், நாகர்கோவிலில் 10 மி.மீ. மழை பெய்துள்ளது.