அதிமுக அரசு தமிழக நலன்களை காவு கொடுக்கிறது: ஸ்டாலின் குற்றச்சாட்டு

அதிமுக அரசு தமிழக நலன்களை காவு கொடுக்கிறது: ஸ்டாலின் குற்றச்சாட்டு
Updated on
2 min read

அதிமுக அரசு தமிழகத்தின் நலன்களை எல்லாம் ஒவ்வொன்றாக காவு கொடுத்துக் கொண்டிருக்கிறது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''அதிமுக அரசு தமிழகத்தின் நலன்களை எல்லாம் ஒவ்வொன்றாக காவு கொடுத்துக் கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

லட்சக்கணக்கான மாணவர்கள்- அதிலும் குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்கள் மருத்துவக் கல்வியில் சேருவதற்கான நீட் தேர்வை எழுதும் நெருக்கடியில் சிக்கிக்கொண்டிருக்கின்ற நேரத்தில், சட்டமன்றத்தில் கண் துடைப்பிற்காக ஒரு சட்டத்தை நிறைவேற்றி விட்டு, அந்த சட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெற முடியாமல், சிறைக் கம்பிகளுக்கு பின்னால் இருந்து கிடைக்கும் வழிகாட்டுதலில் தவித்துக் கொண்டிருக்கிறது.

மத்திய அரசோ நீட் தேர்வை தமிழகத்தில் நடத்தியே தீருவது என்று தீவிரம் காட்டி வருகிறது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாளும் முடிந்து இப்போது மே 7- ஆம் தேதி நீட் தேர்வும் வரவிருக்கின்ற நிலையில் மாணவர்கள் என்ன செய்வது என்று திணறிக் கொண்டிருப்பதைப் பார்க்க மிகவும் திகைப்பாக இருக்கிறது. ஆனால் பினாமி அரசு வெறும் வார்த்தை ஜாலங்களிலும், குற்றவாளிகளை கொண்டாடி மகிழ்வதிலும் மட்டும் காலத்தைப் போக்கிக் கொண்டிருக்கிறது.

தமிழகத்திற்கு வறட்சி நிவாரணமாகவும், வார்தா புயல் நிவாரணமாகவும் 62 ஆயிரம் கோடிக்கு மேல் மத்திய அரசிடம் நிதி கோரிய மாநில அரசு, மத்திய குழுவினர் வந்தபோது அதற்கான முழு ஆதாரத்தையும் வழங்காமல், தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் பட்டியலைக் கூட கொடுக்காமல் கோட்டை விட்டனர்.

இதன் விளைவாக இன்றைக்கு வெறும் 2014 கோடி ரூபாயை மட்டும் வறட்சி மற்றும் புயல் நிவாரண நிதிகளாக பெற்றுவிட்டு, மற்ற மாநிலங்களை விட நாங்கள் அதிகமாக மத்திய அரசிடமிருந்து நிதி பெற்று விட்டோம் என்று அமைச்சர்கள் வீண் தம்பட்டம் அடித்துக் கொண்டு விளம்பரம் தேடுவதில் தீவிரமாக இருக்கிறார்கள்.

இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக இலங்கை ராணுவம் நடத்திய இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க மேலும் இரண்டு ஆண்டு காலம் காலக்கெடுவை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் கவுன்சிலில் மூன்றாவது முறையாக நீட்டித்துக் கொடுத்துள்ள நிலையில், அது பற்றி வாய் திறக்காமல் இருக்கும் 'பினாமி' அரசு மத்திய அரசுக்கு எவ்வித அழுத்தமும் கொடுக்காமல் அச்சடித்த பதுமையாக அசையாமல் இருக்கிறது.

முதல்வர் என்ற பட்டத்தை மட்டும் சூட்டிக் கொண்டிருப்பவரோ இது குறித்து எல்லாம் கருத்து தெரிவிக்காமல் 'பேசா முதல்வராக' இருப்பதிலேயே கவனமாக இருந்து தன் பதவியை காப்பாற்றிக் கொள்ள நினைக்கிறார்.

2016 நவம்பர் மாதம் 10 ஆம் தேதியன்று நடைபெற்ற பொருளாதார ஆசிரியர்கள் மாநாட்டில் பேசிய மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரபிரதான் 'தமிழ்நாட்டில் மீத்தேன் திட்டம் செயல்படுத்தப்படாது' என்று திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அதை வரவேற்று நான் கூட அறிக்கை விடுத்திருந்தேன். அப்படி கைவிடப்பட்ட திட்டம் பற்றி சமீபத்தில் 28.2.2017 அன்று டெல்லியில் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது கவலையளிக்கிறது.

ஆனால் இதுவரை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது மட்டுமின்றி, 'மீத்தேன் திட்டத்தை மீண்டும் கொண்டுவரக் கூடாது' என்று மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமலும் பெட்டிப் பாம்பு போல் அடங்கிக் கிடக்கிறது.

அரசின் செயல்பாடு இப்படியிருக்க, தமிழக மக்களின் நலன்களை பாதிக்கும் நீட் தேர்வு, வறட்சி நிவாரண நிதி ஒதுக்கீடு, மீத்தேன் திட்டம் போன்றவற்றில் மத்திய அரசும் துளியும் கவலைப்படாமல் செயல்படுவது வேதனையளிக்கிறது.

லட்சக்கணக்கான மாணவர்களின் நலன், ஏழரைக் கோடி மக்கள் சந்தித்து வரும் வறட்சியின் வாட்டம், லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் மீத்தேன் திட்டம், காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்டவற்றில் தமிழக நலன் சார்ந்த முடிவுகளை மத்திய அரசு எடுக்கத் தயங்குவதும், தமிழக மக்களின் நலன் பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படாததும் உள்ளபடியே வருத்தமளிக்கிறது.

அதுமட்டுமின்றி தமிழக சட்டமன்றத்தின் உணர்வுகளை மீறும் வகையில் இலங்கை இனப்படுகொலை பற்றிய சுதந்திரமான விசாரணைக்கான காலக்கெடுவையும் இப்போது இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கப்படுவதை மத்திய அரசு ஐக்கிய நாடுகள் சபையில் அமைதியாக வேடிக்கை பார்த்தது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்து விட்டது'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in