Published : 20 Nov 2013 12:00 AM
Last Updated : 20 Nov 2013 12:00 AM

சொத்துக் குவிப்பு வழக்கு: ஜெ.-க்கு 2 வாரம் அவகாசம்

கர்நாடகா அரசின் பதிலுக்கு பதில் மனு தாக்கல் செய்ய ஜெயலலிதாவிற்கு இருவாரகால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதை, சொத்து குவிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி பாலகிருஷ்ணாவின் பதவி நீட்டிப்பு அவதூறு வழக்கில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

இந்த வழக்கு, நீதிபதிகள் பி.எஸ்.சௌகான், எஸ்.ஏ.பாப்டே ஆகியோரடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்கிழமை விசாரணக்கு வந்தது. அதில், கர்நாடகா சார்பில் ஆஜரான பெண் வழக்கறிஞர் அனிதா ஷெனாய், ‘இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் பின்பற்றப்பட்டுள்ளதாகவும், இது குறித்த பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு விட்டதாகவும்’ தெரிவித்தார்.

மேலும், ‘தம் பதவி நீட்டிப்பில் நீதிபதி பாலகிருஷ்ணாவிற்கு விருப்பம் இல்லை என்பதால், ஜெயலலிதாவின் மனுவை தள்ளூபடி செய்ய வேண்டும்’ எனவும் நீதிபதிகளை கேட்டுக் கொண்டார். இதில், உச்ச நீதிமன்றம் நீதிபதி பாலகிருஷ்ணா பதவி நீட்டிப்பில் கர்நாடகா அரசுக்கு அளித்த பரிந்துரையை வழக்கறிஞர் அனிதா, ‘உத்தரவு’ எனக் குறிப்பிட்ட போது மறுத்த நீதிபகள், ‘அது உத்தரவல்ல! வழிகாட்டுதல்!’ என திருத்தம் செய்தனர்.

பிறகு நீதிபதிகள், கர்நாடகாவின் பதில் மனு மீது, ஜெயலலிதாவை பதில் அளிக்க உத்தரவிட்டனர். இதற்கு ஜெயலலிதா தரப்பில் ஆஜராகி இருந்த வழக்கறிஞரான சேகர் நாப்டே கேட்ட இருவார கால அவகாசத்தை அளித்து நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர்.

பெங்களுரில் நடந்து வரும் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், அதன் நீதிபதி பாலகிருஷ்ணா கடந்த செப்டம்பர் 30-ல் ஓய்வு பெற்றார். இவரது பதவியை அந்த வழக்கின் தீர்ப்பு வரும் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என ஜெயலலிதா ஒரு மனு அளித்திருந்தார். இதில், உச்ச நீதிமன்றம் கர்நாடகா அரசுக்கு அளித்த பரிந்துரை பின்பற்றவில்லை என்று ஓர் அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கில் கர்நாடகா அரசு, புதிய நீதிபதியாக ஜான் மைக்கேல் டி’குன்ஹா என்பவரை கடந்த நவம்பர் 4–ல் நியமித்துள்ளது.

பரிசுதொகை வழக்கு: சிபிஐ கோரிக்கை

வெளிநாட்டு பரிசுகள் குறித்து ஜெயலலிதா மீது சிபிஐ தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என சிபிஐ கோரியது. இதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், வழக்கை ஒத்தி வைத்தது.

ஜெயலலிதாவிற்கு 1992-ல் வெளிநாட்டில் இருந்து முறைகேடாக பரிசுத் தொகை பெற்றதாக சிபிஐ அவர் மீது வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு, அப்போதைய மாநில அமைச்சர்களான செங்கோட்டையன் மற்றும் அழகு திருநாவுக்கரசு ஆகியோர் மீதும் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதை, 2011-ல் சென்னை உயர் நீதிமன்றம் இது, பத்து வருடங்களுக்கு முந்தைய குற்றச்சாட்டு என வழக்கை தள்ளுபடி செய்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கு அமர்வு நீதிபதி எஸ்.எஸ்.நிசார் மற்றும் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சித்தார்த், எதிர்தரப்பு பல்வேறு காரணங்கள் கூறி அவகாசம் பெற்று, வழக்கு தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டு வருவதாகவும், இதை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் நீதிபதிகளை கேட்டுக் கொண்டார்.

அழகு திருநாவுக்கரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சுப்ரமணியம், இது குறித்து படிக்க வேண்டிய தஸ்தாவேஜ்கள் நிறைய இருப்பதாகவும், இதற்காக அடுத்த வருடம் மார்ச் வரை ஒத்தி வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், அடுத்த வருடம் ஜனவரி அல்லது பிப்ரவரியில் இதன் இறுதி விசாரணை நடைபெறும் என உத்தரவிட்டு, வழக்கை ஒத்தி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x