

மகாபாரதப் போரில் அரவான் (கூத்தாண்டவர்) களப்பலி கொடுக்கப்படுவதை நினைவுபடுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரைப் பெருவிழாவில் 16-ம் நாள் அழுகளம் நிகழ்ச்சி விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயிலில் நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த ஜூன் 25-ம் தேதி கொடியேற்றம், சாகை வார்த்தலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி கண் திறத்தல் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. மும்பை, கொல்கத்தா, டெல்லி, சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் வந்திருந்தனர்.
தங்களை புதுமணப் பெண் களைப்போல் அலங்கரித்துக் கொண்டு கோயிலின் முன்பு இருந்த பூசாரியின் கையால் தாலி கட்டிக்கொண்டனர். கற்பூரம் ஏற்றி கூத்தாண்டவரை வழிபட்ட திருநங்கைகள், கோயிலின் வெளியே வந்து கும்மியடித்தனர். இரவு முழுவதும் அவர்கள் ஆடிப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்த விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். இன்று காலை கூத்தாண்டவர் கோயிலில் தேரோட்டம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் விழாக் குழுவினரும் செய்துள்ளனர். பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. தற்காலிகமாக 4 பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு, ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.