Published : 16 Dec 2013 12:16 PM
Last Updated : 16 Dec 2013 12:16 PM

மாட்டு வண்டியில் மணல் அள்ள தடை கூடாது: ராமதாஸ்

அன்றாட பிழைப்புக்காக மாட்டு வண்டியில் மணல் அள்ளும் தொழிலாளர்களுக்கு தடை விதிக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆறுகளில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளுவதற்கு பொதுப்பணித் துறை தடை விதித்திருக்கிறது. இது அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது.

தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், கரூர் உள்ளிட்ட காவிரிப் பாசன மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ள கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே தடை விதிக்கப்பட்டிருக்கிறது. கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கடந்த ஓராண்டாக மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதிக்கப்படவில்லை.

அதற்குப் பிறகும் காஞ்சிபுரம், மற்றும் வேலூர் மாவட்டங்களில் பாலாற்றில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ள அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த மாவட்டங்களிலும் மாட்டு வண்டிகளில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆறுகளில் மணல் அள்ள பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்து இருப்பது தான் இதற்குக் காரணம் என்று பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

ஆறுகளில் மாட்டு வண்டிகளின் மூலம் மணல் அள்ளுவது காலம்கால மாகவே அனுமதிக்கப்பட்டு வந்திருக்கிறது. கடந்த ஆண்டு இறுதி வரை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பொதுப்பணித் துறையினரிடம் உரிமம் பெற்று ஒரு வண்டி மணல் ரூ. 60 என்ற விலையில் மாட்டு வண்டிகள் மணல் அள்ள அனுமதி அளிக்கப்பட்டது. சிறிய அளவில் வீடு கட்டுபவர்கள், வீடுகளில் மராமத்துப் பணிகளை மேற்கொள்பவர்களுக்கு குறைந்த அளவில் மணல் கிடைத்தாலே போது மானது.

மேலும், இவர்களால் அதிக விலை கொடுத்து சரக்குந்து மணலை வாங்க முடியாது என்பதால், மாட்டு வண்டி மணலை வாங்கி வந்தனர். இதன்மூலம் இரு தரப்பினருமே பயனடைந்து வந்தனர். இந்த நிலையில் வண்டிகளில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டிருப்பதால், அதையே வாழ்வா தாரமாக கொண்டுள்ள பல லட்சக்கணக்கான தொழிலாளர்களின் குடும்பங்கள் பல மாதங்களாக கடுமையான வறுமையில் வாடுகின்றன. அதுமட்டுமின்றி, சிறிய அளவிலான கட்டுமானப் பணிகளும் தடை பட்டிருக்கின்றன.

ஆறுகளில் மணல் அள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த ஆகஸ்ட் மாதம் தடை விதித்தது. ஆனாலும் உரிய துறைகளிடம் அனுமதி பெற்று மணல் அள்ளிக்கொள்ள பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, தமிழகத்தின் பல மாவட்டங்களில் சரக்குந்துகளில் ஆற்றுமணலை அள்ள அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

இத்தகைய சூழலில் பசுமைத் தீர்ப்பாயத்தின் ஆணையால் தான் மாட்டுவண்டிகளில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசு கூறுவது நம்பும்படியாக இல்லை. ஆற்றுப்படுகைகளில் குறிப்பிட்ட ஆழத்திற்கு மேல் மணல் அள்ளக் கூடாது; மணல் அள்ளுவதற்கு எந்திரங்களை பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றங்களே நிபந்தனைகள் விதித்தும், அதையெல்லாம் மதிக்காமல் மணல் கொள்ளையர்கள் சரக்குந்துகளில் மணலை அள்ளிச் செல்கின்றனர்.

அன்றாட பிழைப்புக்காக மாட்டு வண்டியில் மணல் அள்ளும் தொழிலாளர்களுக்கு தடை விதித்திருப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழகம் முழுவதும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மாட்டு வண்டிகளில் மணல் எடுத்து விற்பதை தொழிலாக கொண்டுள்ளனர். அவர்களின் வாழ் வாதாரத்தை அரசு பறிக்கக் கூடாது.

சரக்கு பேருந்துகளில் மணல் எடுக்க கொள்கை வகுக்கப்பட்டிருப்பதைப் போலவே, வண்டிகளில் மணல் அள்ளவும் கொள்கை வகுத்து செயல்படுத்த வேண்டும். இயற்கை வளங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் வண்டிகளில் மணல் அள்ள அரசு அனுமதிக்க வேண்டும். ஒரு வேளை, வண்டிகளில் மணல் அள்ள பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்திருந்தால் அதையும் நீக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x