Published : 11 Dec 2013 12:00 AM
Last Updated : 11 Dec 2013 12:00 AM

தேமுதிகவில் குடும்ப உறுப்பினர்கள் ஆதிக்கமா? - பண்ருட்டி ராமச்சந்திரன் பிரத்யேகப் பேட்டி

தேமுதிகவில் குடும்ப உறுப்பி னர்கள் மற்றும் உறவினர்களின் ஆதிக்கம் உள்ளதா என்பதற்கு பண்ருட்டி ராமச்சந்திரன் மனம் திறந்து பதிலளித்தார். நாடாளு மன்றத் தேர்தலில் தேமுதிக தலைமை எடுக்கும் முடிவைப் பொறுத்தே அந்தக் கட்சியின் எதிர்காலம் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

தேமுதிக அவைத் தலைவர் மற்றும் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ள பண்ருட்டி ராமச்சந்திரன், ‘தி இந்து’வுக்கு அளித்த பேட்டி:

தமிழக அரசியலில் முதன்முறை யாக வயதை காரணமாகக் கூறி, ஓய்வெடுப்பதாக கூறியுள்ளீர்கள். உண்மையான காரணம் என்ன?

77 வயதான நிலையில் உடல்நிலை சரியில்லாததால், மருத்துவர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர். மரணம் அல்லது தேர்தல் தோல்விதான் ஒரு அரசியல்வாதியை ஓய்வு பெறச்செய்யும் என்பார்கள். ஆனால் இந்த இரண்டு காரணங்கள் இல்லாமல், அரசியலில் இருந்து ஓய்வு பெற முடியும் என்பதைக் காட்டியுள்ளேன். இது நான் சுயமாக சிந்தித்து, யாருடைய நிர்பந்தமும் இன்றி எடுத்த முடிவு. எனது முடிவுக்கு வேறு யாரும் அல்லது எந்தக் காரணமும் இல்லை.

கட்சிப் பதவி மற்றும் எம்.எல்.ஏ. என்ற சுமைகளைத் தொடர்ந்து தாங்க முடியவில்லை. தொகுதி மக்களுக்கும் சேவையாற்ற முடியவில்லை. சிந்தனைத் திறன் இருந்தாலும், வயது காரணத்தால் செயல்பட முடியவில்லை. அதனால்தான் இந்த முடிவு எடுத்தேன். இனி சுதந்திரமாக, ஜாலியாக இருக்கப் போகிறேன்.

வேறு கட்சிகளில் சேரும் எண்ணம் எதுவும் இல்லை. அதனால்தான் அரசியலில் இருந்து ஓய்வு என்று அறிவித்துள்ளேன். தேவைப்படுவோருக்கு என் ஆலோசனைகளை வழங்குவேன்.

உங்கள் முடிவு குறித்து முன்கூட்டியே கட்சித் தலைவர் விஜயகாந்த் அல்லது கட்சி யினரிடம் தெரிவித்தீர்களா? ராஜி னாமாவுக்குப் பிறகு உங்களை கட்சித் தலைமை தொடர்பு கொண்டதா?

விஜயகாந்திடம் எதுவும் கலந்தாலோசிக்கவில்லை. அவரிடம் பேசினால் என்னை ஓய்வு பெற விடமாட்டார். எனது ராஜினாமா அறிவிப்புக்குப் பிறகு இதுவரை (செவ்வாய்க்கிழமை மாலை) விஜயகாந்தோ, அவரது தரப்பிலோ யாரும் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை. இது அவருக்கு அதிர்ச்சியளிக்கும் முடிவுதான். கடைசியாக அவரை கடந்த 5-ம் தேதி மதுரையில் சந்திந்தபோது கூட இதுபற்றி நான் பேசவில்லை.

உங்களது திடீர் முடிவில் அதிமுக உள்பட வேறு எந்தக் கட்சி அல்லது நபர்களின் பின்னணி உள்ளதா?

எனது முடிவு, அதிமுகவுக்கே ‘ஷாக்’ தரும் முடிவுதான். அவர்களுக்கோ, வேறு யாருக்குமோ இதில் தொடர்பில்லை. எனது மகன் அதிமுகவில் சேரப் போகிறார் என்ற தகவலும் கற்பனை. அவர் அமெரிக்காவில் பிசினஸ் செய்கிறார்.

தேமுதிகவில் இருந்த கால கட்டத்தில் கட்சி நடவடிக்கைகள் திருப்தி அளித்ததா? தொடர்ந்து அங்கிருந்து எம்.எல்.ஏ.க்கள் வெளியேறக் என்ன காரணம்?

கட்சி நடவடிக்கைகளில் நான் ஈடுபடவில்லை, தலையிடுவதும் இல்லை. கருத்துகள் தான் கூறி வந்தேன். என் கருத்துகளை ஏற்பதும், ஏற்காமல் இருப்பதும் தலைமையின் விருப்பம். இறுதியில் கட்சித் தலைவர் விஜயகாந்த்தான் முடிவெடுப்பார்.

ஆரம்பத்தில் நன்றாகத்தான் இருந்தது. அதன் பிறகு சற்று பின்னடைவுதான். என்னால் அதை கடைசி வரை சரிசெய்ய முடியவில்லை. எம்.எல்.ஏ.க்கள் வெளியேறுவதற்கு என்னால் காரணம் சொல்ல முடியாது.

விஜயகாந்துடன் உங்களுக்கு என்ன கருத்து வேறுபாடு?

தனிப்பட்ட முறையில் ஒன்றும் இல்லை. அவருடன் நல்ல உறவு உண்டு. ஆனால், அரசியல் நிலைப்பாட்டில் அவருக்கும் எனக்கும் சில கருத்து வேறுபாடுகள் உள்ளன.

தேமுதிகவில் குடும்ப உறுப்பி னர்கள் தலையீடு, ஆதிக்கம் இருக்கிறதா?

இந்தியாவில் ஒரு சில கட்சிகளைத் தவிர எல்லாக் கட்சிகளிலும் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் தலையீடு இருக்கும். அப்படித்தான் இங்கும். குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து பேசுவதை நாம் எப்படி தடுக்க முடியும். அவர்களுடைய நம்பிக்கைக்கு உரியவர்களிடம் பேசுவதை எப்படிக் குற்றம் காணமுடியும். காங்கிரசில்கூட சோனியா காந்தி குடும்பத்தினர் தலையீடு இல்லாமலா இருக்கிறது.

மூத்த அரசியல்வாதியான உங்களது வழிகாட்டுதலின்றி, எதிர்காலத்தின் கட்சியின் நடவடிக்கைகள் சட்டசபையிலும், வெளியிலும் சிறப்பாக இருக்குமா?

நல்லபடியாக நடந்து கொள் வார்கள் என்று நம்புகிறேன். கட்சியை விஜயகாந்த் ஆரம்பித்த பின்னர்தான் அதில் நான் சேர்ந்தேன். எனவே, விஜயகாந்தால் சுயமாக கட்சியை நடத்த முடியும் என நம்புகிறேன்.

தேமுதிக துவங்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறியுள்ளதா?

திமுக, அதிமுகவுக்கு மாற்றாக தேமுதிக துவங்கப்பட்டது. மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படுவது தேமுதிக போன்ற அரசியல் கட்சிகளின் கடமை. அதை அவர்கள் செய்யவில்லை என்றுதான் நினைக்கிறேன். எதிர்காலத்தில் ஏற்படும் அரசியல் சூழ்நிலையைப் பொறுத்து என்ன முடிவெடுக்கப் போகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் என்ன முடிவு எடுக்கிறார்களோ அதைப் பொறுத்துதான் தேமுதிகவின் எதிர்காலம் அமையும்.

ஏற்காடு தொகுதியில் தேமுதிக போட்டியிடாததற்கு என்ன காரணம்?

ஜனநாயகத்தில் ஆளுங்கட்சிக்கு தேர்தலில் போட்டி இருக்க வேண்டும். திமுக அங்கு போட்டியிட்டதால், தேமுதிக போட்டியிட வேண்டாம் என விஜயகாந்த் முடிவெடுத்தார். டெல்லியில் போட்டி வேண்டாம் என்றேன். ஆனால், அவர் போட்டியிடுவதாக அறிவித்தார்.

இவ்வாறு பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.Sign up to receive our newsletter in your inbox every day!

 
x