

காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த 2 ராணுவ வீரர்கள் மரணம் அடைந் தனர். அவர்களது உடல்களை விரைந்து சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஷ்மீர் மாநிலம் குரேஸ் செக்டார் பகுதியில், நேற்று முன்தினம் ஏற்பட்ட பனிச்சரிவில் புதையுண்டு, 14 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இவர்களில் 2 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். அதில் ஒருவர், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள கண்ணந்தங்குடி கீழையூரைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளர் பூமிநாதன்-அமுதா தம்பதியரின் மகன் இளவரசன்(27).
பி.ஏ. பொருளாதாரம் படித்துள்ள இவர், கடந்த 2012-ல் ராணுவத்தில் சேர்ந்து ஜம்மு- காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் 51 ராஷ்ட்ரீய ராயல் படைப் பிரிவில் பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு குரேஷ் பகுதியில் உள்ள ராணுவ தளத்தில் இருந்து பேசிய ராணுவ அலுவலர், இளவரசன் பலியான தகவலை அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.
உயிரிழந்த இளவரசனின் தந்தை பூமிநாதன் கூறும்போது, “கடந்த 4 நாட்களுக்கு முன் தொலை பேசியில் பேசிய இளவரசன் அடுத்த வாரத்தில் வருகிறேன் என்று தெரி வித்தார். இந்த முறை வரும்போது திருமணம் செய்துவைக்கத் திட்ட மிட்டிருந்தோம். இப்படி ஆகும் என கனவிலும் நினைக்கவில்லை. என் மகன் உடலை விரைந்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
கண்ணந்தங்குடி கீழையூரைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட இளை ஞர்கள் ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது. உயிரிழந்த இளவரசனுக்கு சகோதரி சுதா(32), சகோதரர் வினோத்குமார்(23) உள்ளனர்.
இளவரசன் வீட்டின் முன் சோகத்துடன் அமர்ந்திருக்கும் உறவினர்கள். |
பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த மற்றொருவர் மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள பல்லக் காபட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி என்பவரது மகன் சுந்தர பாண்டியன்(26). இவர், 4 ஆண்டு களுக்கு முன் ராணுவத்தில் சேர்ந்தார். ஜம்மு காஷ்மீர் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தபோது, பனிச்சரிவில் சிக்கி இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இவரது மனைவி சுகப்பிரியா. இவர்கள் திருமணம் 3 ஆண்டு களுக்கு முன் நடந்துள்ளது. தற்போது அவரது மனைவி கர்ப்ப மாக உள்ளார். சுந்தரபாண்டியன் இறந்ததால், அவரது சொந்த கிராமமான பல்லக்காபட்டி சோகத் தில் மூழ்கி உள்ளது. அவரது உடல் ராணுவ ஹெலிகாப்டரில் இன்று மதுரைக்கு கொண்டுவரப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
காஷ்மீரின் குரேஸ் செக்டார் பகுதியில் நேற்று 4 ராணுவ வீரர்கள் சடலமாக மீட்கப்பட்டனர். இதனால் அங்கு பனிச்சரிவில் புதைந்து உயிரிழந்த ராணுவ வீரர்கள் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது. காஷ்மீர் முழுவதும் கடந்த சில நாட்களில் பனிச்சரிவில் புதைந்து 15 ராணுவ வீரர்கள் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.