உள்ளாட்சித் தேர்தல் ரத்து: திமுக வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

உள்ளாட்சித் தேர்தல் ரத்து: திமுக வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Updated on
2 min read

டிசம்பர் 31-க்குள் தேர்தலை நடத்த உத்தரவு

*


உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் முறைப்படி வெளியிடாததால், தேர்தல் குறித்த அறிவிப்பாணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதனால், 17, 19-ம் தேதிகளில் நடக்க இருந்த உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்படுகிறது. விதிமுறைகளின்படி, புதிய அறிவிப் பாணை வெளியிட்டு டிசம்பர் 31-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்கு மாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் வரும் 24-ம் தேதியுடன் முடிகிறது. இதை கருத்தில் கொண்டு, 17, 19-ம் தேதிகளில் 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடப்பதாக மாநில தேர்தல் ஆணையம் கடந்த 25-ம் தேதி அறிவித்தது. அடுத்தநாளே தொடங்கிய வேட்புமனு தாக்கல் 3-ம் தேதியுடன் முடிந்தது. 4.97 லட்சம் பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இதற்கிடையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவில், ‘உள்ளாட்சி தேர்தலில் பழங்குடியினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இதுதொடர்பாக அரசு பிறப்பித்துள்ள ஆணைகளை ரத்து செய்து உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும்’ என கோரியிருந்தார்.

நீதிபதி என்.கிருபாகரன் முன்பு இந்த மனு மீதான விசாரணை கடந்த 29-ம் தேதி நடந்தது. அப்போது திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ‘‘இடஒதுக்கீடு குறித்த அறிவிப்பாணையை அரசு 6 மாதங் களுக்கு முன்பே வெளியிட்டி ருக்க வேண்டும். விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன. உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பைக்கூட செப்டம்பர் 25-ம் தேதி விடுமுறை தினமான ஞாயிற்றுக் கிழமை அறிவித்து, நள்ளிரவில்தான் இணையத்தில் வெளியிட்டனர். மறுநாளே வேட்புமனு தாக்கல் தொடங்கிவிட்டது. யாருக்கும் போதிய அவகாசம் தரப்படவில்லை’’ என்றார்.

‘‘கடந்த 2006 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் பின்பற்றப்பட்ட நடைமுறைதான் தற்போதும் பின்பற்றப் பட்டுள்ளது’’ என்று அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.முத்துக்குமாரசுவாமி கூறினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளிவைத்தார்.

இடைக்கால உத்தரவு

இந்நிலையில், நீதிபதி என்.கிருபாகரன் நேற்று மாலை இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பித்தார். அவர் கூறியதாவது:

‘உண்மையான ஜனநாயகம் என்பது, 20 பேர் அமர்ந்து முடிவு செய்யும் விஷயம் அல்ல. அது கிராம மக்களால் முடிவு செய்யப்பட வேண்டும்’ என்றார் காந்தியடிகள். நாடாளுமன்றம், சட்டப் பேரவைகளைத் தாண்டி உள்ளாட்சி அமைப்புகள் என்பது 3-வது அரசு நிர்வாகம். அதற்கு அதிக முக்கியத் துவம் தரவேண்டும். ஆனால் உண்மையான உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. குற்ற பின்புலம் உள்ளவர்கள் போட்டியிடுவதால் வன்முறை அதிகம் நடக்கிறது.

மக்கள்தொகை அடிப்படையில் பழங்குடியினருக்கு உரிய பிரதிநிதித் துவம் வழங்கவில்லை என்பதுதான் இந்த வழக்கு. ஆனால் கடந்த காலங் களில் பின்பற்றிய நடைமுறைதான் தற்போதும் பின்பற்றப்படுகிறது என்பதால் அந்த கோரிக்கையை ஏற்க முடியவில்லை.

ஆனால், தேர்தல் குறித்த அறிவிப்பை ஊடகங்களிடம் செப்டம்பர் 25-ம் தேதி மாலை வெளியிட்டு, அடுத்த நாள் அதிகாலை 12.15 மணிக்கு அறிவிப்பாணையை அலுவலகம் இயங்காத வேளையில் இணை யத்தில் வெளியிட்டுள்ளனர். இது முன்கூட்டியே தெரிந்ததால் ஆளுங் கட்சி செப்டம்பர் 26-ம் தேதியே வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

உள்ளாட்சி தேர்தலின் முதல் படியே அதை முறைப்படி பொதுமக்களுக்கு அறிவிப்பதுதான். அதிலேயே மாநில தேர்தல் ஆணையம் சறுக்கியுள்ளது. இது சட்டப்படி செல்லாது. எனவே தேர்தல் தேதி குறித்த அறிவிப்பாணை ரத்து செய்யப்படுகிறது.

தனி அதிகாரிகள் நியமனம்

தற்போதுள்ள உள்ளாட்சி அமைப்பு களின் பதவிக்காலம் அக்டோபர் 24-ம் தேதி முடிவுக்கு வருகிறது. அதற்குள் தேர்தலை நடத்தியிருக்க வேண்டும். தற்போதைய சூழலில் தேர்தல் தள்ளிப்போவதால், புதியவர்கள் பொறுப்பேற்கும் வரை தனி அதிகாரி களை நியமித்து உள்ளாட்சி அமைப்பு களை நிர்வகிக்க வேண்டும். தேர்தல் குறித்த அறிவிப்பாணையை புதிதாக வெளியிட்டு உரிய விதிமுறைகளின்படி டிசம்பர் 31-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகள் லாபம் ஈட்டும் அமைப்பல்ல. சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும். பணம் என்பது தேர்தல் முடிவை தீர்மானிக்கும் காரணியாக இருக்கக் கூடாது. கடந்த காலங்களில் ஆட்சி செய்தவர்கள், தற்போது ஆள்பவர்கள் ஏற்கெனவே செய்த தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது. குறிப்பாக, வன்முறை கலாச்சாரத்தை கைவிட வேண்டும். உண்மையான, நேர்மையான, வெளிப்படையான தேர்தலை நடத்த அனைத்து கட்சிகளும் தேர்தல் ஆணையத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

குற்றப்பின்னணி உள்ளவர்கள் போட்டியிடுவதை தடுக்கும் வகையில், அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்த வேண்டும். வேட்பாளர்களின் குற்றப்பின்னணி தொடர்பான பிரமாணப் பத்திரம் உள்ளாட்சி தேர்தலிலும் கட்டாயமாக் கப்பட வேண்டும். புதிய அறிவிப் பாணை வெளியிடும் வரை வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள லாம்.

இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜனவரி முதல் வாரத்துக்கு தள்ளிவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in