

காவிரி பிரச்சினையால் கர்நாடகா வில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து, தமிழக கர்நாடக மாநில பதிவு எண்ணை மறைத்து வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்கி வருகின்றனர்.
தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விடுவதைக் கண்டித்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடகாவில் வன்முறை வெடித்தது. தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்களை கன்னட போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர். இதனால், தமிழகம் - கர்நாடக மாநிலங்களுக்கு இடையே வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.
தொழிலாளர்கள் அவதி
கர்நாடக மாநிலத்தில் பல பகுதிகளில் இயல்பு நிலை திரும்பினாலும், பல்வேறு அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால், பாது காப்பு காரணங்களுக்காக தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்கள் கர்நாடகாவிலும், கர்நாடக பதிவு எண் கொண்ட வாகனங்கள் தமிழகத்திலும் அனுமதிக்கப்படவில்லை. இதனால், பெங்களூரு மற்றும் ஓசூரில் பணிபுரியும் தொழிலாளர் கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி, தருமபுரி, திரு வண்ணாமலை, வேலூர் உள் ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் பெங்களூருவில் கட்டுமானப் பணி உட்பட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு பணிபுரியும் தொழிலாளர்கள் பலர், வார விடுமுறை தினங்களில் இருசக்கர வாகனங்களில் சொந்த ஊருக்குச் சென்று வருவது வழக்கம். தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலையால், கர்நாடகாவில் இருந்து இருசக்கர வாகனம், கார் உள்ளிட்ட எவ் வித வாகனங்களையும் தமிழகத் துக்குள் நுழைய போலீஸார் அனுமதிப்பதில்லை.
நூதன முறையில்
இதனால், இரு மாநிலங் களுக்கு இடையே பணிக்குச் செல்வோர், சொந்த ஊர்களுக்குச் செல்லும் தொழிலாளர்கள், இருசக்கர வாகனத்தில் உள்ள பதிவு எண்ணை மறைத்தும், புதிதாக எண் இல்லாத நம்பர் பிளேட்களை வாங்கி வாகனங்களில் பொருத்தியும் ஓட்டி வருகின்றனர்.
இதேபோல், லாரி ஓட்டுநர் களும் நூதன முறையில், தமிழக எல்லையில் நுழையும்போது லாரிகளில் கேஏ என்பதை டிஎன் எனவும், கர்நாடக எல்லையில் நுழையும்போது டிஎன் என்பதை கேஏ எனவும் மாற்றிக்கொண்டு வாகனங்களை ஓட்டிச் செல் கின்றனர். சிலர் ஆந்திரா மற்றும் வடமாநில பதிவு எண்ணை ஒட்டி வாகனங்களை இயக்கி வருகின்றனர். பதிவு எண்ணை மாற்றி வாகனங்களை இயக்குவதால், அந்த வாகனங் கள் விபத்தில் சிக்கினால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் நிலை உள்ளது.