

புதிய தொழில்முனைவோர் தொழில் தொடங்க 25 சதவீத மானியத்தில் ரூ.1 கோடி வரை கடன் வழங்கப்படும் என்று தொழில்துறை அமைச்சர் பி.மோகன் கூறினார்.
படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் மற்றும் புதிய தொழில் முனை வோருக்கான வாய்ப்புகள் குறித்த மாவட்ட அளவிலான கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது.
தமிழக அரசின் தொழில் வணிகத் துறையும், இந்திய தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பும் (பிக்கி) இணைந்து நடத்திய இந்த கருத்தரங்கை தொழில்துறை அமைச்சர் பி.மோகன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 45 சதவீதமும், ஏற்றுமதியில் 40 சதவீதமும் சிறு குறுந்தொழில்களுக்கு பங்கு உண்டு. தமிழகத்தில் 9.6 லட்சம் பதிவுபெற்ற சிறு குறுந்தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதன் மூலம் ரூ.63,133 கோடி அளவுக்கு முதலீடு செய்யப்பட்டு ஏறத்தாழ 63 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
படித்த வேலையில்லாத இளைஞர்கள் சுயதொழில் தொடங்குவதற்கு 15 சதவீத மானியத்தில் கடனுதவி அளிக்கப்படுகிறது. புதிய தொழில்முனைவோர் கடனுதவி திட்டத்தில் (நீட்ஸ்) 25 சதவீத மானியத்தில் ரூ.1 கோடி வரை கடன் பெறலாம். இந்த திட்டத்தில் பயனாளிகளில் 50 சதவீதம் மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் மோகன் கூறினார்.