Published : 13 Jul 2016 08:19 PM
Last Updated : 13 Jul 2016 08:19 PM

எம்ஜிஆர் உறவினர் விஜயன் கொலை வழக்கு பானு உள்ளிட்ட 7 பேருக்கும் ஆயுள் தண்டனை: முதன்மை அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

எம்ஜிஆர் உறவினர் விஜயன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விஜயனின் உறவினரான பானு உள்ளிட்ட 7 பேருக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் நேற்று (புதன்கிழமை) ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பளித்தது.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் மனைவி ஜானகியின் தம்பி நாராயணன். இவருக்கு 6 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.இந்த மகள்களில் சுதா என்பவரை எம்ஜிஆர் தனது வளர்ப்பு மகளாக தத்தெடுத்துக் கொண்டார். இந்த சுதாவின் கணவர்தான் விஜயன் என்ற விஜயகுமார்.

எம்ஜிஆர் மறைவிற்குப்பிறகு அவருக்குச் சொந்தமான ராமாவரம் தோட்டம் உள்ளிட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை விஜயனும், சுதாவும் நிர்வகித்து வந்தனர். இந்த சொத்துகளை நிர்வகிப்பதில் விஜய னுக்கும், அவரது மனைவி சுதாவின் தங்கைகள் குடும்பத்தாருக்குமிடையே பிரச்சினை ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த 2008 ஜூன் 4-ம் தேதி இரவு காரில் கோட்டூர்புரம் அருகே சென்று கொண்டிருந்த விஜயனை, ஒரு கும்பல் வழிமறித்து இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்தது. அபிராமபுரம் போலீஸார் விசாரித்து வந்த இந்த வழக்கு, பின்னர் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப் பட்டது.

சிபிசிஐடி போலீஸாரின் விசாரணை யில், விஜயனைக் கொலை செய்தது சுதாவின் தங்கைகளில் ஒருவரான பானு என்பதும், அவர் போலீஸ்காரரான கருணா என்பவரின் உதவியுடன் கூலிப்படையினர் மூலமாக விஜயனை தீர்த்துக்கட்டியதும் அம்பலமானது.

பானு, எம்ஜிஆர் நிறுவிய ஒரு பள்ளிக்கு நிர்வாகியாக இருந்துள்ளார் என்றும், இந்த பள்ளிக்கூடத்தை தனது பெயரில் எழுதி வைக்க பானு விடுத்த கோரிக்கையை விஜயன் ஏற்க மறுத்ததாலேயே இந்தக் கொலை நடந்துள்ளது என்பதையும் போலீஸார் தங்களின் விசாரணையில் ஊர்ஜிதப்படுத்தினர்.

இதையடுத்து, இந்த வழக்கில் பானு முதல் குற்றவாளியாகவும், பானுவிற்கு உதவிய போலீஸ்காரர் கருணா 2-வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டனர். தவிர விஜயனைக் கொலை செய்த சுரேஷ், ஆர்.கார்த்திக், தினேஷ்குமார், சாலமன், எம்.கார்த்திக், பள்ளி ஆசிரியை புவனா உள்ளிட்ட 8 பேர் மீதும் சிபிசிஐடி போலீஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

இதில் ஆசிரியை புவனா வெளி நாட்டிற்கு தப்பியதால், அவர் தேடப் படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, எஞ்சிய 7 பேர் மீதான வழக்கு மட்டும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் என்.விஜயராஜ் ஆஜரானார். இந்த வழக்கில் மொத்தம் 79 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். அதில் 19 பேர் பிறழ் சாட்சியமாக மாறினர். மொத்தம் 119 சான்று ஆவணங்களும், 34 சான்றுப் பொருட்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஏற்கனவே இறுதிகட்ட வாதம் நிறைவடைந்ததையடுத்து நேற்று தீர்ப்பளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, நேற்று மாலை 3.30 மணிக்கு முதன்மை அமர்வு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக குற்றம் சாட்டப்பட்ட பானு உள்ளிட்ட 7 பேரும் ஆஜராகினர். அதேப்போல் கொலை செய்யப்பட்ட விஜயனின் மனைவி சுதா மற்றும் அவரது மகன் உள்ளிட்டவர்களும், சிபிசிஐடி சார்பில் எஸ்பி நாகஜோதியும் ஆஜராகினர்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரையும் குற்றவாளிகள் என தீர்மானித்துள்ளதாக கூறிய நீதிபதி, தண்டனை குறித்து அவர்களிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பானு உள்ளிட்ட 7 பேரும் நாங்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லை என மறுத்தனர்.

அதையடுத்து நீதிபதி ஜி.ஜெயச்சந் திரன், குற்றவாளிகள் 7 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்ப ளித்தார். இந்த தீர்ப்பைக் கேட்டதும் பானுவின் மகள் மற்றும் மகன் நீதிமன்ற வளாகத்திலேயே கதறினர்.

‘‘தனது கணவரைக் கொலை செய்த வர்களுக்கு சரியான தீர்ப்பு கிடைத் துள்ளது. தனக்கு நியாயம் கிடைத் துள்ளது’’ என விஜயனின் மனைவி சுதா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x