Published : 19 Feb 2014 08:35 AM
Last Updated : 19 Feb 2014 08:35 AM

பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை: நாளை மறுநாள் முதல்வர் திறந்து வைக்கிறார்

அண்ணாசாலை பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 21) திறந்து வைக்கிறார். திறப்பு விழாவுக்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன என சுகாதாரத்துறை உயர் அதிகாரி தெரிவித்தார்.

சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலக கட்டிட வளாகம் (ஏ-பிளாக்), டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையாக மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக (பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை) மாற்றும் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. பொதுப்பணித் துறையின் மூலம் சுமார் ரூ.26 கோடியில் மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனையில் 500 படுக்கைகள், 20 நவீன அறுவை சிகிச்சை அரங்கங்கள், 200 கழிப்பறைகள், பரிசோதனைக் கூடங்கள், நூலகம் மற்றும் நோயாளிகளை ஸ்டெச்சர் மற்றும் வீல் சேர்களில் அழைத்து செல்ல சாய்வு தளங்கள், லிப்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மருத்துவ சேவை நிறுவனத்தின் (டிஎன்எம்எஸ்சி) சார்பில் ரூ.97 கோடியில் அமெரிக்கா, ஜெர்மனி,ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிநவீன மருத்துவ உபகரணங்கள் இறக்குமதி செய்யப்பட்டு பொருத்தப்பட்டுள்ளன.

மருத்துவமனையில் சுமார் 1,000 சதுர அடியில் பெரிய மருந்தகம் அமைக்கப்பட்டுள்ளது. டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் நோயாளிகளுக்கான கேன்டீன், ஆய்வுக் கூடங்கள், தீவிர சிகிச்சைப் பிரிவு, ரத்த வங்கி, ரத்த சேகரிப்பு மையம் என அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. 6 தளங்களிலும் பயன்படுத்தும் வகையில் 7 சிறிய பேட்டரி கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன. வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த மருத்துவமனையில் இதய அறுவைச் சிகிச்சை, நரம்பியல் துறை, சிறுநீரகத் துறை, மயக்கவியல் துறை, ரத்தநாள துறை என மொத்தம் 9 சிறப்பு துறைகள் செயல்பட உள்ளன. 65 டாக்டர்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட நர்ஸ்கள், மருந்தாளுநர்கள், லேப் டெக்னீசியன்கள் அனைவரும் பணியில் சேர்ந்துவிட்டனர். இந்த மருத்துவமனையை தற்போது திறப்பு விழாவுக்கு தயார்படுத்தும் வேலையில் சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

இந்த பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை வரும் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 21) திறக்கப்படுகிறது. திறப்பு விழாவுக்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள பிற மருத்துவமனைகளில் இருந்து பரிந்துரைக்கப்படும் நோயாளிகளுக்கு, பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இயக்குநருக்கு 50 பேர் போட்டி

இந்த மருத்துவமனைக்கென்று தனியாக இயக்குநர் ஒருவர் நியமிக்கப்பட உள்ளார். இந்த பதவிக்கு முன்னாள் மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) மற்றும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் பதவியில் இருந்து, வரும் 31-ம் தேதியுடன் ஓய்வு பெறும் வி.கனகசபை உள்பட தமிழகம் முழுவதும் இருந்து 50-க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x