

குடியரசுத்தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் மனுத்தாக்கலில், அதிமுக இரு அணிகளின் தலைவர்களும் பங்கேற்றனர். அதே நேரம், ‘‘அதிமுகவில் பிளவு இல்லை. ஒன்றாக அதுவும் எங்களிடம்தான் இருக்கிறது’’ என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
குடியரசுத்தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவளிக்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் கேட்டுக் கொண்டார். முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்திடம் தொலைபேசியில் பேசிய பாஜக தலைவர் அமித்ஷா, ராம்நாத்துக்கு ஆதரவு கோரினார்.
இதையடுத்து, ராம்நாத் கோவிந்துக்கு முதல்வர் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். தொடர்ந்து, டெல்லியில் நேற்று நடந்த மனுத்தாக்கல் நிகழ்வில் இருதரப்பும் பங்கேற்றனர்.
முதல்வர் பழனிசாமி அணியில் அவரும், மக்களவை துணைத்தலைவர் மு.தம்பிதுரை, டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் உள்ளிட்டவர்களும் ஓபிஎஸ் அணி சார்பில் ஓ.பன்னீர்செல்வம், வி.மைத்ரேயன் எம்பியும் பங்கேற்றனர்.
முன்னதாக, பாஜக ஆதரவு தொடர்பாக மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை கூறுகை யில், ‘‘அதிமுக தலைமை நிர்வாகிகளில் சசிகலாவும் ஒருவர், அவரின் அனுமதியுடன்தான் பாஜக வேட்பாளருக்கு ஆதரவளித்தோம்’’ என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, நேற்று மாலை பத்திரிகையாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ‘‘அதிமுக அணிகள் இணைப்புக்கான நோக்கத்தில் இங்கு வரவில்லை. இணைப்பு முயற்சி தற்போதைக்கு இல்லை. குடியரசுத்தலைவர் வேட்பு மனுத்தாக்கலில் பங்கேற்கவே வந்துள்ளேன்’’ என்றார்.
தொடர்ந்து, செய்தியாளர்கள் கேள்விகளுக்கு அவர் பதிலளித்ததாவது:
அதிமுக மூன்றாக உடைந்துள்ளதே?
அதிமுக இரண்டாகவோ, மூன்றாகவோ உடையவில்லை. ஒன்றாகத்தான் இருக்கிறது. அதுவும் எங்களிடம்தான் இருக்கிறது. ஆட்சி அவர்களிடம் இருக்கிறது. 122 சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவர்களிடம் இருப்பதால் ஆட்சியில் உள்ளனர். அதிமுக ஒட்டு மொத்த தொண்டர்கள் எங்களிடம்தான் இருக்கின்றனர்.
தமிழகத்துக்கு விரைவில் தேர்தல் வரும் என எந்த அடிப்படையில் தெரிவித்தீர்கள்?
இந்த ஆட்சி எங்களால் கவிழாது. இப்போது நடக்கும் அரசு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க, திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நிலைக்க முடியாது. பல்வேறு விஷயங்களில் மெத்தன போக்கை அரசு கடைப்பிடித்து வருகிறது.
இவ்வாறு அவர் பதிலளித்தார்.
ரஜினி - பாஜக கூட்டணி?
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்ற பரபரப்பு தமிழக அரசியல் களத்தில் நிலவுகிறது. பல்வேறு கட்சிகள், அமைப்புகளை சேர்ந்தவர்களும் ரஜினிகாந்தை சந்தித்து வருகின்றனர். ‘‘நான் அரசியலுக்கு வருவேன் என்று என்னை சந்தித்தவர்கள் சொன்னதை மறுக்கவில்லை’’ என்று ரஜினிகாந்தும் நேற்று முன்தினம் தெரிவித்தார்.
இந்நிலையில், டெல்லியில் நேற்று பேட்டியளித்த பன்னீர்செல் வத்திடம், ‘எதிர்காலத்தில் ரஜினி, பாஜக, ஓபிஎஸ் அணி கூட்டணி அமையுமா?’ என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த பன்னீர்செல்வம், ‘‘எதிர்காலத்தில் அரசியல் எதுவாக இருக்கும் என்று கருத்து சொல்ல முடியாது. அப்படி சூழ்நிலை அமைந்தால் நிர்வாகிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும்’’ என்றார்.