

கோவை மாங்கரை அருகே வாயில் புண்ணுடன் சுற்றித்திரிந்த குட்டி யானை, செங்கல் சூளை ஒன்றில் நேற்று இறந்தது. அதைத் தாய் யானையிடமிருந்து மீட்டு, அடக்கம் செய்ய வனத்துறையினர் பெரும் சிரமப்பட்டனர்.
கோவை மாவட்டம் துடியலூர் பன்னிமடை அருகே உள்ள பொன்னுத்து மலை அடிவாரத்தில் சுற்றித்திரிந்த யானைக் கூட்டத்தில் உள்ள குட்டி யானை ஒன்று வாயில் புண்ணுடன் அவதிப்பட்டு வந்தது. பயிர்கள் மற்றும் கிழங்கு வகைகளை நாசம் செய்யும் காட்டுப் பன்றிகளை விரட்ட வைத்த வெடியை கடித்ததால் குட்டி யானைக்கு வாயில் புண் ஏற்பட்டிருக்கலாம் என்று வனத்துறையினர் கருதினர்.
அந்த குட்டி யானையை, கூட்டத் திடமிருந்து பிரித்து சிகிச்சை யளிக்க வனத்துறையினர் திட்ட மிட்டனர். ஆனால் அது அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இந்நிலையில், நேற்று அதிகாலை கோவையிலிருந்து ஆனைகட்டி செல்லும் வழியில் உள்ள மாங்கரை சோதனைச்சாவடி அருகே 6 யானைக் கூட்டத்துடன் வந்த குட்டி யானை, எழுந்து நிற்க முடியாமல் படுத்துவிட்டது.
யானைகளின் பிளிறல் சத்தம் கேட்டு வந்த மக்கள் இதைப் பார்த்து, வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதற்குள், குட்டி யானையுடன் தாய் யானையை விட்டுவிட்டு 3 யானைகள் காட்டுக்குள் சென்றுவிட்டன. தாய் யானையும் மற்றொரு பெரிய யானையும் படுத்துக் கிடந்த குட்டி யானையை எழுப்ப முயற்சித்தன. அது முடியாமல்போகவே, அதைத் தூக்கிச்சென்று அருகில் உள்ள செங்கல் சூளை கொட்டகைக்கு அருகே வைத்தன. உடனிருந்த பெரிய யானை, காட்டுக்குள் சென்றுவிட, தாய் யானை மட்டும் அதை காவல் காக்க ஆரம்பித்தது.
இதையடுத்து, போளுவாம் பட்டி வனச்சரகர் தினேஷ்குமார் தலைமையில் திரண்ட வனக் குழுவினர் தாய் யானையை விரட்டிவிட்டு குட்டி யானைக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர். ஆனால், தாய் யானை சுற்றிலும் வருவோரை துரத்துவதும், திரும்ப குட்டி படுத்திருந்த இடத்தில் நிற்பதும், அதை அசைத்துப் பார்ப் பதும், திரும்பவும் பொதுமக்கள், வனத்துறையினரை துரத்துவது மாக இருந்தது. தாய் யானையை விரட்டவும், குட்டி யானையை மீட்கவும் கும்கி யானை கொண்டு வரப்பட்டது.
இறுதியில் மதியம் 3 மணிக்கு தாய் யானையை காட்டுக்குள் விரட்டிவிட்டு, இறந்த நிலை யிலேயே குட்டி யானையை வனத்துறையினர் மீட்டனர்.