

நீதியரசர் கிருஷ்ணய்யர். தனது 99-வது வயதிலும் மரண தண்டனைக்கு எதிராகப் போராடிவரும் மனிதநேயப் போராளி. கடந்தாண்டு முதல் கிருஷ்ணய்யர் பெயரில் “கிருஷ்ணய்யர் மரண தண்டனை எதிர்ப்பு விருது”, “கிருஷ்ணய்யர் மனிதநேய விருது”, “செங்கொடி விருது” ஆகிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு இந்த விருதுகள் மும்பை வழக்கறிஞர் யுக் மோகித் சவுத்ரி, நடிகர் மம்முட்டி, சென்னையைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர்கள் அங்கயற்கண்ணி, வடிவாம்பாள், சுஜாதா ஆகியோருக்கு வழங்கப்பட்டன.
இந்தாண்டுக்கான விருதுகள் அனைத்தையும் பெண்களே தட்டிச் செல்வது பெருமைக்குரிய விஷயம். சென்னையில் சனிக்கிழமை மரண தண்டனைக்கு எதிரான கூட்டமைப்பு சார்பாக அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இதில் வயது மூப்பு காரணமாக மகாசுவேதா தேவி மற்றும் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் ஆகியோர் விழாவுக்கு நேரில் வரவில்லை. அதனால் மகாசுவேதா தேவி சார்பில் தூக்குத் தண்டனை கைதி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் சார்பில் பேராசிரியர் சரஸ்வதி விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.
அவர்களைப் பற்றி...
எழுத்துப் போராளி மகாசுவேதா தேவி
கிருஷ்ணய்யர் மரண தண்டனை எதிர்ப்பு விருது மேற்கு வங்காள எழுத்தாளரும் மரண தண்டனைக்கு எதிரான தீரம் மிக்க செயல்பாட்டாளருமான திருமதி மகாசுவேதா தேவிக்கு வழங்கப்பட்டது. இந்தியாவின் மொத்த விருதுகளும் அலங்கரிக்கும் அவரைப் பற்றி எழுத பக்கங்கள் போதாது. ஒரு சிறு துளி மட்டும்... நெகிழ்ந்துப்போவீர்கள்.
அது 1997-ம் ஆண்டு. மகாசுவேதா தேவியின் எழுத்துத் தொண்டுக்காக இந்திய அரசின் மிகப் பெரிய விருதான ‘ஞானபீட விருது’ அவருக்கு அறிவிக்கப்பட்டு, அதனை வழங்க நாளும் குறிக்கப்பட்டிருந்தது. அதேசமயம் அதற்கு மறுநாள் ஆந்திராவில் இருவரின் தூக்குத் தண்டனைக்கும் நாள் குறிக்கப்பட்டுவிட்டது. விஷயம் மகாசுவேதா தேவிக்கு தெரிந்தது.
விருது வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா இவருக்கு விருது வழங்க முற்பட... முதலில் இதைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று குடியரசுத் தலைவரின் கைகளில் கருணை மனுவைத் திணித்தார் சுவேதா தேவி. குடியரசுத் தலைவர் உடனடியாக பரிசீலிப்பதாகக் கூறிய பின்பே விருதை வாங்கினார் சுவேதா தேவி.
அன்றைய தினம் இரவோடு இரவாக தூக்கு தண்டனைக்கு தடையாணை பிறக்கப்பட்டு, சில மணி நேரத்துக்கு முன்னதாக அது நிறுத்தப்பட்டது. இன்றும் அம்மையார் தனது எழுத்துகள் மூலம் மரண தண்டனைக்கு எதிராக போராடி வருகிறார்!
எடுத்த சபதம் முடித்த கிருஷ்ணம்மாள்
கிருஷ்ணய்யர் மனிதநேய விருதை பெற்றவர் சமூக சேவகர் திருமதி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன். நாம் வாழும் காலத்தில் காந்தியைப் பார்க்க ஆசைப்படுவர்கள் இந்தத் தம்பதியை தரிசிக்கலாம். வினோபா காந்தி வழி நடக்கும் கிருஷ்ணம்மாள் தனது வாழ்நாள் முழுவதும் ஏழை தலித் மக்களுக்கு நிலம் வாங்கிக்கொடுப்பது உள்பட அவர்களுடைய உரிமைகளுக்காகப் போராடி வருபவர். அவரைப் பற்றியும் ஒரு சிறு துளி...
ஒருமுறை நாகபட்டினத்தில் நிலச்சுவான்தார் ஒருவர் ஒரே நாளில் பத்திரப்பதிவு செய்வதாக இருந்தால் கேட்ட மொத்த நிலத்தையும் தருகிறேன் என்று அம்மையாரிடம் சபதம் போட்டார். அம்மையாரிடமோ பணம் கிடையாது; ஆனாலும் சரி என்றார். மொத்தம் 1,040 ஏக்கர் நிலம். தாட்கோ நிதி கிடைத்தால் மட்டுமே அது சாத்தியம். உடனே அவர் அப்போதைய ஆட்சியர் ஜவஹரிடம் சென்றார். விஷயத்தைச் சொன்னார். விஷயத்தின் வீரியம் புரிந்துகொண்ட ஆட்சியர் வருவாய்த் துறை அதிகாரிகளை வரவழைத்தார். பயனாளிகளை அம்மையார் அழைத்து வர காலை 10 மணிக்கு ஆரம்பித்து மதியம் 3 மணி வரை மடமடவென நடந்து முடிந்தது பத்திரப் பதிவு. நிலப்பத்திரம் தயார். ஆனால், மறுநாள் சென்னையின் வருவாய் துறை உயர் அதிகாரி ஒருவர் இதில் தலையிட்டு, இதனால், அரசுக்கு பெரும் நஷ்டம் என்று மறுத்துவிட்டார்.அம்மையார் யாரிடமும் எதுவும் சொல்லிக்கொள்ளவில்லை. நேராக பஸ் பிடித்து அன்றைய முதல்வர் கருணாநிதியின் வீட்டுக்குச் சென்றார். அவரிடம் விஷயத்தைச் சொன்னார். உடனே உத்தரவுகள் பறந்தன. அம்மையாரை திருப்பி அனுப்பிய அதே வருவாய்த் துறை அதிகாரி அவரை வரவேற்று எல்லா பத்திரங்களுக்கும் கழிவு உறுதி செய்தார்.
அடுத்து உடனே கிடைத்தது நிதி. அம்மையார் அடுத்து கிளம்பியது நாகப்பட்டினத்துக்கு. சொன்னபடி நிலச்சுவான்தாரிடம் பணத்தை கொடுக்க... 1,040 பத்திரங்களும் ஒரே நாளில் பதிவாகியது.
‘இடியாத’கரைக்கு செங்கொடி
இந்த ஆண்டுக்கான செங்கொடி விருதைப் பெறுபவர்கள் தங்கள் மண்ணுக்காக, மக்களுக் காக, நாட்டின் எதிர்கால மொத்த சந்ததியருக்காகவும் ஆண்டுக்க ணக்கில் போராடிவரும் இடிந்தகரை மக்கள். அம்மக்கள் சார்பாக விருதை பெறுபவர்கள் சுந்தரி, செல்வி, சேவியரம்மாள்.
இன்று இடிந்தகரை பெண்கள் ஆண்களுக்கு நிகராக - பல சமயங்களில் ஆண்களை விஞ்சி ஏராளமான போராட்டங்களுக்குத் தலைமை வகிப்பது. இன்னும் வகிக்கிறார்கள். போராட்டம் என்றால் சாதாரண போராட்டம் அல்ல... மொத்தம் இரண்டு லட்சத்து 27 ஆயிரம் பேர் மீது 345 வகையான வழக்குகள். அதில் பல தேச துரோக வழக்குகள். ஆனாலும் யாருக்கும் அஞ்சாத வீரத்துடன் நிற்கிறார்கள் பெண்கள். இந்த விருது அம்மக்கள் ஒவ்வொருவர் கையிலும் ஏந்தவி ருக்கும் மற்றுமொரு செங்கொடி!