

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விரைவாக விடுவிக்க வகை செய்யும் வகையில் புதிய நடைமுறையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
கடல் எல்லையைக் கடந்து மீன்பிடிக்க வந்ததாகக் கூறி, தமிழக மீனவர்கள் பலரை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் போக்கு சமீப காலமாக அதிகரித்துள்ளது. அதுபோன்று கைது செய்யப்படும் மீனவர்கள், நீண்ட நாள்கள் சிறையில் அடைத்துவைக்கப்படுகின்றனர். இந்நிலைக்கு முடிவு கட்டும் வகையில், பாகிஸ்தானுடன் உள்ளதைப் போன்ற நடைமுறையை பின்பற்ற மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது குறித்து டெல்லியில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “நீண்ட காலமாக இந்தப் பிரச்சினை இருந்து வருகிறது. தமிழக மீனவர்கள் அதிக நாள்கள் இலங்கையில் உள்ள சிறைகளில் அடைத்து வைக்கப்படுவதை தடுக்கும் வகையில் புதிய நடைமுறையை பின்பற்றுவதற்கான உடன்படிக்கை விரைவில் ஏற்படுத்தப்படும்.
மத்திய அரசு நிதியுதவியுடன் கொண்டு வரப்பட்டுள்ள கடற்கரை பாதுகாப்புத் திட்டத்தை குஜராத், மகாராஷ்டிரம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் விரைவாக அமல்படுத்த வேண்டும்” என்றார்.
அப்போது உடனிருந்த உள்துறைச் செயலாளர் அனில் கோஸ்வாமி கூறுகையில், “கவனக்குறைவாக பாகிஸ்தான் கடல் எல்லையைக் கடந்து செல்லும் இந்திய மீனவர்கள், அந்நாட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். அவர்களை விரைவாக விடுவிக்க செயல்பாட்டு நடைமுறை ஒன்று பின்பற்றப்படுகிறது. அதன்படி, இந்திய மீனவர்கள் விரைவாக விடுவிக்கப்படுகின்றனர்.
அதேபோன்று, இந்திய கடல் பகுதியைக் கடந்து வந்ததால் கைது செய்யப்படும் பாகிஸ்தான் மீனவர்களையும் தாமதம் செய்யாமல் குறிப்பிட்ட காலத்துக்குள் விடுவித்து வருகிறோம். அதேபோன்ற நடைமுறையைப் பின்பற்றி இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களையும் விடுவிக்க முயற்சி எடுக்கப்படும்” என்றார்.