

வியாசர்பாடியில் 6 பேர் கொண்ட கும்பல் வழக்கறிஞரை நடுரோட்டில் வெட்டிக் கொலை செய்தது.
சென்னை வியாசர்பாடி மெகசின்புரம் ஆறுமுகம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் ரவி (42). சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்தவர், பின்னர் அதிலிருந்து பிரிந்து ஜனநாயக புரட்சி முன்னணி என்ற அமைப்பை உருவாக்கினார். நேற்று காலையில் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஆட்டோவில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் ரவியை வழிமறித்தது.
அவர்கள் கொலை செய்ய வந்திருப்பதை அறிந்து ரவி தப்பி ஓடினார். ஆனால் அந்த கும்பல் அவரை விரட்டிச் சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதனால் தலை, கழுத்தில் பலத்த வெட்டு விழுந்து சம்பவ இடத்திலேயே ரவி இறந்தார். இதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். ரவி இறந்ததை உறுதி செய்த கும்பல் அங்கிருந்து ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்றது.
உறவினர்கள் மறியல்
வீட்டருகிலேயே ரவி கொலை செய்யப்பட்டதால் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்துவிட்டனர். அப்பகுதி மக்களும் அங்கே குவிந்துவிட்டனர். வியாசர்பாடி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து ரவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்ப முயன்றனர். அதற்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து உடலை எடுக்கவிடாமல் சத்தியமூர்த்தி நகரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். கொலை செய்தவர் களை கைது செய்த பின்னரே உடலை எடுக்க விடுவோம் என்றனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
காவல் இணை ஆணையர் சந்தோஷ்குமார், புளியந்தோப்பு துணை ஆணையர் மயில்வாகனன், அண்ணாநகர் துணை ஆணையர் பெரோஸ்கான் அப்துல்லா, செம்பியம் உதவி ஆணையர் ஜான் ஜோசப் மற்றும் உதவி ஆணையர்கள் கெங்கைராஜ், மன்னர்மன்னன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் ரவியின் உறவினர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிப்பதாக உறுதி அளித்தனர்.
பின்னர் ரவியின் உடலை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உறவினர்கள் மறியலால் கொலை சம்பவம் நடந்து சுமார் 2 மணி நேரம் கழித்த பின்னரே ரவியின் உடலை அங்கிருந்து எடுக்க முடிந்தது. கொலை சம்பவம் குறித்து வியாசர்பாடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வியாசர்பாடியில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ரவி மீது பல வழக்குகள்
கொலை சம்பவம் குறித்து போலீஸார் கூறும்போது, “நிலம், வீடு, சொத்து தொடர்பான பிரச்சினைகளில் ரவி தலையிட்டு கட்டப் பஞ்சாயத்து செய்துள்ளார். இதில் ரவி மீது பலருக்கு முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. 14-11-2014 அன்று நில பிரச்சினை தொடர்பாக கோவிந்தராஜ் என்பவரை தாக்கிய வழக்கு மாதவரம் காவல் நிலையத்திலும், 14-3-2015 அன்று வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகுந்து இளைஞர் காவல் படையைச் சேர்ந்த தினேஷ் என்பவரை தாக்கிய வழக்கு போன்றவை ரவி மீது உள்ளன. மேலும் சில அடிதடி வழக்குகளும் உள்ளன” என்றனர்.
கொலை செய்யப்பட்ட ரவிக்கு உமாமகேஸ்வரி (35) என்ற மனைவியும், யுவதர்ஷினி என்ற மகளும், தனதர்ஷன் என்ற மகனும் உள்ளனர்.
17 நாளில் 4 வழக்கறிஞர்கள்
கோடம்பாக்கத்தில் கடந்த 6-ம் தேதி மனைவியே கூலிப்படையை ஏவி வழக்கறிஞர் முருகனை கொலை செய்தார். தவறான தொடர்பால் ஏற்பட்ட மோதலில் கடந்த 8-ம் தேதி வடபழனி திருமண மண்டபத்தில் வைத்து நாகேஷ்வரராவ்(35) என்ற வழக்கறிஞர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார். புழலில் கடந்த 15-ம் தேதி அகில்நாத்(34) என்ற வழக்கறிஞர் நடுரோட்டில் வெட்டி கொலை செய்யப்பட்டார். நேற்று ரவி கொலை செய்யப்பட்டுள்ளார்.
கேமரா பதிவு
ரவியை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற கொலையாளிகளின் உருவங்கள் அந்த பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 2 கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளன. அந்த பதிவுகளை வைத்து விசாரணை நடந்து வருகிறது. புழல் சிறையில் இருக்கும் ரவுடி நாகேந்திரன் என்பவருக்கும், ரவிக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. அவரது ஆட்கள் கொலையில் ஈடுபட்டார்களா என்றும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.