

ரூ.570 கோடி விவகாரத்தில் சிபிஐ விசாரணையின் மூலம் உண்மை நிலை வெளிவரும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் திருப்பூரில் கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தல் நேரத்தில், திருப்பூரில் ரூ.570 கோடி ரொக்கத்தை கொண்டு சென்ற 3 கன்டெய்னர் லாரிகளை, தேர்தல் பறக்கும் படையினர் பிடித்தனர். இது பொது மக்களிடையே பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதற்கு உண்டான நியாயமான விளக்கத்தை மக்கள் அரசிடம் எதிர்பார்க்கிறார்கள்.
இச்சூழலில் சட்டம் தனது கடமையை நிலைநாட்டும் வகையில் திருப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. சிபிஐ விசாரணையின் மூலம் உண்மை நிலை வெளிவரும் என்று நம்புகிறோம்'' என்று வாசன் கூறியுள்ளார்.