

தமிழகம் முழுவதும் ஆன்லைன் நிதி நிறுவனம் நடத்தி 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்த வழக்கில் கைதான நிதி நிறுவன அதிபர், அவரது மகன் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களது பெண் மேலாளர் திருச்சி பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை குன்றத்தூரைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (55). இவரது மனைவி சாயிப். மகன் சாமுவேல் (31). இவர்கள், இரட்டிப்பு வட்டி தருவதாக ஆன்லைனில் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் செய்து "அபாக்ஸ்' என்ற நிதி நிறுவனம் நடத்தினர்.
இந்த நிறுவனத்தின் கிளைகள் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு, அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் செயல்பட்டது. இவர்கள் நிறுவனத்தில் தமிழகம் முழுவதும் ரியல் எஸ்டேட் பிரமுகர்கள், வர்த்தக பிரமுகர்கள் மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், படித்தவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் முதலீடு செய்துள்ளனர். ஆனால், இவர்கள் கூறியபடி வட்டி வழங்கவில்லை.
முதலீட்டு பணத்தையும் திருப்பி வழங்கவில்லை. விருதுநகர் கிளையில் இவர்கள் நிறுவனத்தில் ரூ.64 லட்சத்து 50 ஆயிரம் முதலீடு செய்து ஏமாற்றமடைந்த சென்னை திருநீர்மலையைச் சேர்ந்த ராஜேந்திரன் அளித்த புகாரின்பேரில், திண்டுக்கல்லை சேர்ந்த விருதுநகர் மாவட்டப் பொருளாதாரக் குற்றப்பிரிவு டி.எஸ்.பி. (பொ) கருணாகரன் தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர்.
சுந்தர்ராஜ், அவரது மகன் சாமுவேல், அவர்களது மேலாளர் வசந்தகுமாரி (36) ஆகியோரை தனிப்படை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், சுந்தர்ராஜ், அவரது மனைவி, அவரது மகன் ஆகியோர் தமிழகம் முழுவதும் நூறு கோடி ரூபாய்க்கு மேலாக மோசடி செய்ததாக அதிர்ச்சி தகவல் வெளியானது.
பாதிக்கப்பட்டவர்கள் பலருக்கு இன்னும் தாங்கள் ஏமாற்றப்பட்ட விவரம் தெரியவில்லை. பலர் சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளதால் அவர்கள் புகார் தெரிவிக்க தயக்கம் காட்டி வருகின்றனர். கைது செய்த சுந்தர்ராஜ், அவரது மகன் சாமுவேல், மேலாளர் வசந்தகுமாரி ஆகியோரை தனிப்படை போலீஸார் திங்கள்கிழமை இரவு மதுரை டான்பீட் (முதலீட்டார்கள் பாதுகாப்பு நீதிமன்றம்) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
15 நாள் காவல்
அவர்களை 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். சுந்தர்ராஜ், அவரது மகன் சாமுவேல் ஆகியோரை போலீஸார் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். மேலாளர் வசந்தகுமாரி திருச்சி பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மூவரையும், போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தனிப்படை போலீஸார் முடிவு செய்துள்ளனர். மேலும், தலைமறை வான சுந்தர்ராஜ் மனைவி சாயிப்பை தேடிவருகின்றனர்.
இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், பாதிக்கப்பட்டவர்கள் விருதுநகர், திண்டுக்கல், மதுரை உள்பட அந்தந்த மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸில் புகார் செய்யலாம்’’ என்றார்.