

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் காமராஜர், மூப்பனார் உள்ளிட்ட தலைவர்களை முன்னிறுத்தாமல் கட்சியை வளர்க்க முடியாது என்றும் இங்கே என்ன நிலைமை என்பது தெரியாமலேயே முடிவெடுக்கின்றனர் என்றும் காங்கிரஸ் மேலிடம் மீது குற்றம் சாட்டி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து ஞானதேசிகன் ராஜினாமா செய்தார்.
இதையடுத்து இளங்கோவனை நியமனம் செய்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார். இந்த தகவலை தமிழக காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இரண்டாவது முறையாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவராக பதவி வகித்த ஞானதேசிகன் நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது பதவி விலகலை ஏற்றுக்கொண்ட காங்கிரஸ் மேலிடம், ஈவிகேஎஸ் இளங்கோவனை புதிய தலைவராக நியமனம் செய்துள்ளது.
கட்சி மேலிடத்திற்கு நன்றி:
தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு இரண்டாவது முறையாக தம்மை தலைவராக தேர்ந்தெடுத்ததற்காக கட்சி மேலிடத்திற்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நன்றி தெரிவித்துள்ளார்.
கட்சி மேலிடத்தின் எதிர்பார்ப்புக்கேற்ப நடந்துகொள்வேன் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
மேலும், "ஜி.கே.வாசன் காங்கிரஸை விட்டுச் செல்லமாட்டார். அவர் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து செயல்படுவார்” என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
நாளை பொறுப்பேற்பு:
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பொறுப்பேற்றுக் கொள்கிறார்.
அவர் காலை 10.00 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் தலைவராக பொறுப்பேற்று கொள்கிறார் என தமிழக காங்கிரஸ் கட்சி செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.