Published : 18 Oct 2013 03:00 PM
Last Updated : 18 Oct 2013 03:00 PM

சென்னையில் வங்கி அதிகாரி கொலை - கொன்றது நண்பர்களா? கொள்ளையர்களா?

சென்னை வேளச்சேரி வீனஸ் காலனி 3–வது தெருவில் வசித்து வந்தவர் நாகராஜ் (57). பெசன்ட் நகரில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு மனைவி செல்வி, மகன் கலையரசன் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். 2 பேருக்கும் திருணமாகிவிட்டது. மகள் அமெரிக்காவிலும், மகன் கலையரசன் துபாயிலும் குடும்பத்துடன் வசிக்கின்றனர்.

சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவில் உள்ள மகள் வீட்டுக்கு செல்வி சென்றுவிட்டார். இதனால் வீட்டின் மேல் மாடியில் நாகராஜ் தனியாக இருந்தார். கீழே உள்ள வீட்டில் இவரது தாய் கமலா இருந்தார். வியாழக்கிழமை காலையில் நாகராஜனை எழுப்பி விடுவதற்காக தாய் கமலா மாடிக்கு சென்றார். அப்போது அங்கு நாகராஜ் இறந்து கிடந்தார். அவரது கழுத்து நெரிக்கப்பட்டதற்கான தடயங்கள் இருந்தன.

இதைப் பார்த்து தாய் கமலா கதறி அழுதார். இவரது சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்தனர். கொலை சம்பவம் குறித்து காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அடையாறு துணை ஆணையர் பெரோஸ்கான், உதவி ஆணையர் மோகன்ராஜ், வேளச்சேரி ஆய்வாளர் சேகர்பாபு ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

நாகராஜ் வீட்டில் இருந்த 2 பீரோவில் ஒன்று உடைக்கப்பட்டுள்ளது. அதோடு அறை முழுவதும் மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்தது. நாகராஜ் செல்போன் மாயமாகி உள்ளது.

இக் கொலைச் சம்பவம் குறித்து அமெரிக்காவில் உள்ள மனைவியிடம் தொலைபேசியில் காவல் துறையினர் விசாரித்தபோது சென்னை வீட்டில் நகை, பணம் எதுவும் வைக்கவில்லை என்று கூறினார்.

நாகராஜின் வீட்டில் மது அருந்தியதற்கான அடையாளம் உள்ளன. புதன்கிழமை இரவு 3 பேர் நாகராஜின் வீட்டுக்கு வந்துள்ளனர். அவர்கள் கிளம்பும்போது நாகராஜுக்கு சொந்தமான ஸ்கூட்டரை எடுத்துச் சென்றுள்ளனர். இதனை அவரது தாய் பார்த்துள்ளார். நாகராஜ்தான் அவர்களுக்கு ஸ்கூட்டரை கொடுத்திருப்பார் என்று நினைத்துள்ளார்.

குடி போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் 3 பேரும் நாகராஜை கொன்று இருக்கலாம் அல்லது 3 பேரும் சென்ற பின் வேறு யாராவது வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடிக்கும் முயற்சியில் கொலையை அரங்கேற்றி இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். கொலையை செய்தவர்கள் நாகராஜின் செல்போனையும் எடுத்துச் சென்றுவிட்டனர். அந்த செல்போன் சிக்னலையும் காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x