

திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்ற படிவங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பித்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருவொற்றியூர், பூந்தமல்லி உள்ளிட்ட 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கடந்த 1-ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி 31,83,431 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்நிலையில், 01.01.2017-ம் தேதியன்று 18 வயதை பூர்த்தி செய்யும் ஒவ்வொருவரும் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தம், நீக்கம் செய்வதற்கான சிறப்பு முகாம் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள 1,135 பள்ளிகளில் முதல் கட்டமாக கடந்த 11-ம் தேதி நடந்தது.
இதைத் தொடர்ந்து, உள் ளாட்சித் தேர்தலுக்கு முன்பான கடைசி சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. காலை 9.30 முதல் மாலை 5.30 வரை நடந்த இந்த சிறப்பு முகாமில் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று உரிய படிவங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பித்தனர்.
திருவள்ளூர் அருகே உள்ள பாண்டூர் டி.ஈ.எல்.சி கபீஸ் மேல்நிலைப் பள்ளி மற்றும் கைவண்டூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடந்த சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், www.elections.tn.gov.in என்ற இணையதளத்தின் வழியாகவும் வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர் சேர்க்கை மற்றும் திருத்தம், நீக்கம் செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், உத்தரமேரூர், திருக் கழுக்குன்றம், பெரும்புதூர், செங்கல்பட்டு, திருப்போரூர், மதுராந்தகம், செய்யூர், சோழிங்கநல்லூர், ஆலந்தூர், தாம்பரம் ஆகிய 12 வட்டங்களில் உள்ள 5,742 வாக்குச் சாவடிகள் உள்ளன. இந்த சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெற்றது. வாக்குச் சாவடி அலுவலர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.
பெயர் விடுபட்டவர்கள், 18 வயது முடிந்து புதிதாக பெயர் சேர்த்தவர்கள், பெயர் மாறி இருப்பவர்கள் என பல்வேறு தேவைகளுக்கான உரிய படிவங்களை பொதுமக்கள் பூர்த்தி செய்து சமர்ப்பித்தனர். இப்பணிகள் முடிந்ததும் விரைவில் உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
அந்தந்த பகுதிகளில் நடைபெற்ற முகாமை சம்பந்தப்பட்ட வட்டாட்சி யர்கள் ஆய்வு செய்தனர். காஞ்சிபுரம் வட்டம் திம்மசமுத்திரம், பெரியகரும்பூர் உட்பட பல்வேறு இடங்களில் நடைபெற்ற வாக் காளர் பட்டியல் திருத்த முகாமை வட்டாட்சியர் கியூரி ஆய்வு செய்தார். இருங்காட்டு கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி யில் நடைபெற்ற சிறப்பு முகாமை பெரும்புதூர் எம்.எல்.ஏ. பழனி பார்வையிட்டார்.