காணாமல் போன நடைபாதைகள்

காணாமல் போன நடைபாதைகள்
Updated on
3 min read

வ டபழனி பேருந்து நிலையத்தைத் தாண்டி, நூறடி ரோடு செல்வதற்கான சாலை அது. விஜயா மருத்துவமனை, க்ரீன் பார்க் ஹோட்டல், அடுத்து ஃபோரம் மால் என அடுத்தடுத்து பெரிய கட்டடங்கள் பெருகிவிட்டன. ஏற்கனவே நெரிசலாக இருந்த அப்பகுதி, தற்போது மேலும் நெருக்கடியாகிவிட்டது. பெரும் கட்டடங்களிலிருந்து கழிவு நீர் வெளியேறும் பாதாளச் சாக்கடைப் பாதை போதிய சீரமைப்பு இல்லாததால், சாலை பள்ளமாகக் காணப்படுகிறது. சாலை முழுவதும், இரு சக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்களும் ஆக்கிரமித்திருக்கின்றன. பாதசாரிகள் செல்லும் நடைபாதை உருக்குலைந்துள்ளது. ப்ளெக்ஸ் போர்டுகள், மின்சார ஒயர்களா, கேபிள் ஒயர்களா என்று கண்டறிய முடியாத வலைப்பின்னல், நடைபாதையின் முனைகளில் உடைந்த எலக்ட்ரிக் கம்பங்களின் கூர்மையான வளைந்த முனைகள் ஆகியவற்றை அச்சத்துடன் பார்த்தபடியேதான் ஒருவர் கடக்க வேண்டும். ஷாப்பிங் காம்ப்ளக்சின் தனியார் பாதுகாவலர், தற்காலிக போலீசாக மாறி, காரில் வந்த வாடிக்கையாளருக்காகப் பாதசாரியை விலக்கிவிட்டுச் சாலைப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவார். கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்று அத்தனை சிரமங்களையும் அனுபவதித்துதான் ஒருவர் வடபழனி நூறடி சாலையை அடையமுடியும்.

நவீனமாகும் சென்னை

இப்படிக் கடந்து வரும் ஒருவர் சாலையின் முனைக்கு வந்து நின்று, நிமிர்ந்து பார்த்தால், கோயம்பேடு திசையில், பறக்கும் ரயில் பாலத் திட்டம் அமைக்கும் பணிகள் நடந்துவருவதைக் காணலாம். சென்னை நவீன வளர்ச்சிகளை வேகமாக அடைந்துவருகிறது. சென்னையெங்கும் பாலங்கள், பளபளப்பான கிழக்குக் கடற்கரைச் சாலை, பயண நேரத்தைச் சிக்கனமாக்கும் அவுட்டர் ரிங் ரோட், பாதாள ரயில் திட்டம் என்று பல்வேறு வளர்ச்சிகள்.

ஆனால் சென்னை, பழைய மெட்ராசாக இருந்தபோது, பத்தாண்டுகளுக்கு முன்பு வரைகூட, பாதசாரிகள் நடப்பதற்கு நிம்மதியாக இருந்த நடைபாதைகளை இழந்து நிற்கிறது. முன்பு ஜெமினி பாலத்தில் இருந்து இடதுபுற நடைபாதையில் நடந்தால், சென்ட்ரல் வரை நிம்மதியான, தங்குதடையற்ற நடைப் பயணம் சாத்தியம்.

சென்னையில் நடைபாதைகள் காணாமல் போனதற்கும், இருக்கும் நடைபாதைகள் சீர்குலைந்து காணப்படுவதற்கும் மாநகராட்சி நிர்வாகமும், அதிகாரிகளும்தான் பொறுப்பு என்று பல புள்ளிவிவரங்களும் பத்திரிக்கைச் செய்திகளும் நமக்கு உணர்த்துகின்றன. நடைபாதைகள் சரியில்லாத நிலையில் சாலை விபத்துகளும் சென்னையில் அதிகரித்துள்ளன.

சாலையோர வியாபாரிகள் காரணமா?

நடைபாதைகள் சீரமைப்பு தொடர்பான பேச்சு எழும்போதெல்லாம், நடைபாதை வியாபாரிகளின் ஆக்கிரமிப்புதான் காரணம் என்ற பொதுப்படையான குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இந்தியாவில் ஒரு கோடி ஏழை மக்கள் சாலையோரங்களை நம்பிச் சுயதொழில் செய்பவர்கள். அவர்கள் நமது நகர மக்களின் இன்றிமையாத தேவைகளை நிறைவேற்றும் சேவைகளைச் செய்பவர்கள் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். சாலைகளைச் சரியாக வடிவமைத்து, எல்லாருக்குமான பாதையாக அதை மாற்றும் விருப்பமும் உறுதியும் இருந்தால் வணிகர்களும் பாதசாரிகளும் நடைபாதையைச் சேர்ந்தே பயன்படுத்த முடியும். இது எப்படிச் சாத்தியமாகும்?

சாலையோர வியாபாரிகளுக்கான தேசியக் கொள்கையில்தான் அதற்கான பதில் உள்ளது. நகரத்தின் ஒவ்வொரு வார்டிலும் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு, அப்பகுதியில் சாலையோர வியாபாரிகளுக்கான ஒரு பகுதியை ஒதுக்கலாம். அந்தக் கமிட்டியில் சாலையோர வியாபாரிகளின் பிரதிநிதிகளும் இருத்தல் வேண்டும். அந்தக் கமிட்டியே ஒவ்வொரு வியாபாரிக்குமான இடத்தைப் பிரித்துக் கொடுத்து நிர்வகிக்கவும் வேண்டும். சாலையோர வியாபாரிகளுக்கான பாதுகாப்பையும் உறுதிசெய்து, அவர்களை சரியாகப் பதிவுசெய்யும் முறையும் இதனால் சாத்தியப்படும்.

முன்மாதிரி நகரம்

இந்த முறையைப் பின்பற்றி ஒடிஷாவின் தலைநகர் புவனேஸ்வர் மாநகராட்சி வெற்றியும் கண்டுள்ளது. புவனேஸ்வர் மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கென்றே ஒதுக்கப்பட்ட தனி மண்டலங்கள் 54 உள்ளன. அவற்றில் 2 300 வியாபாரிகளுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. சாலையோர வியாபாரிகள் சங்கத்தினருடன் சேர்ந்து அவர்களுக்குத் தகுந்த உரிமங்களும் வழங்கப்பட்டுள்ளன.

சென்னையில் உள்ள சாலை வியாபாரிகள் குறித்த சரியான புள்ளிவிவரங்கள்கூட மாநகராட்சி நிர்வாகத்திடம் இருக்கின்றனவா என்று தெரியவில்லை. இதனாலேயே சாலையோர வியாபாரிகள் காவல்துறையினரின் ‘கருணை’யிலேயே வியாபாரம் நடத்தும் நிலையில் உள்ளனர். மாநகராட்சிகள் புதிய நடைபாதைகளை உருவாக்கும்போது, சாலையோர வியாபாரிகளையும் மனதில் கொண்டு உருவாக்குவது அவசியம். ரயில் நிலையம், பேருந்து நிறுத்தங்கள், வர்த்தகப் பகுதிகள் ஆகியவற்றுக்கு அருகிலேயே சாலையோர வியாபாரிகளுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இந்த இடங்களில் நடைபாதைகளைச் சற்று அகலமாகக் கட்ட வேண்டும்.

ஆனால் சென்னை மாநகராட்சி ஒரே நாளில் சாலையோரக் கடைகளை அப்புறப்படுத்துகிறது. அல்லது பாண்டி பஜாரில் இருப்பது போலப் பல மாடிகள் கொண்ட வர்த்தகக் கட்டடத்தை சாலையோர வியாபாரிகளுக்காக கட்டுகிறது. அவர்கள் சிறிது நாட்களில் அதை விற்றுவிட்டு அல்லது வாடகைக்கு விட்டுவிட்டு மீண்டும் சாலைக்கு வருவதற்கே வாய்ப்பு அதிகம். புவனேஸ்வர் மாநகராட்சியின் நடவடிக்கையே நீடித்து நிற்கும் தீர்வாக அமையும்.

மனமாற்றம் தேவை

சென்னை நகரம் வாகனதாரிகளுக்கு அனுகூலமானதாகவே வடிவமைக்கப்பட்டுவருகிறது. ஆனால் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்துபவர்கள் சிறுபான்மையினரே. ஆனால் சென்னையில் இன்னும் பெரும்பான்மையாக பேருந்துகளைப் பயன்படுத்துபவர்கள், பாதசாரிகள், மிதிவண்டிகளைப் பயன்படுத்துபவர்கள் ஆகியோருக்கெனச் சிந்திக்க இதயம் கொண்ட நிர்வாகமும், பொது மக்களின் மனமாற்றமும் இப்போதைய தேவை.

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் வாகனங்களும் சொத்துகளும் வாழ்க்கைத் தேவையாக மட்டும் பார்க்கப்படுவதில்லை. அந்தஸ்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுகின்றன. ஒரு இளைஞன் வெற்றிகரமான வாழ்க்கையில் அடி எடுத்து வைக்கிறான் என்பதன் அர்த்தமாக இருசக்கர வாகனம் பார்க்கப்படுகிறது. ஒரு வீடும், காரும் வசதியான வாழ்வுக்கான அடையாளங்களாகக் கருதப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில்தான் பாதசாரியையும், சைக்கிளில் செல்பவரையும் அந்தஸ்து குறைந்தவராகப் பார்க்கும் மனப்பழக்கம் வந்துவிடுகிறது.

நல்ல நடைபாதைகள்

ஒரு சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால், வாகனங்களில் இருக்கும் இளைஞர்கள் முதல் 50 வயதுகளில் உள்ள பெரியவர்கள்வரை பிளாட்பாரங்களில் ஏறி, இறங்குவது சென்னையில் சர்வ சகஜமான காட்சி. ஐரோப்பிய நாடுகளின் போக்குவரத்து ஒழுங்குமுறைகளோடு சென்னையை ஒப்பிட வேண்டாம். பெங்களூரு போன்ற நகரங்களிலேயே, பாதசாரிகள் சாலையைக் கடக்கும்போது வாகனங்களை நிறுத்தி வழி விடும் நாகரிகத்தைப் பார்க்க முடிகிறது. சென்னையில் போக்குவரத்து சமிக்ஞைகளுக்கு நிற்பதற்கான பொறுமைகூட இல்லாமல், முன்னே நிற்பவர்களை ஹார்ன் அடித்து விலக்க முனையும் மனப்போக்கே காணப்படுகிறது.

சிறிய தெருக்களிலும் பைக்குகளும், கார்களும் நடைபாதைகளை அடைத்துக்கொண்டிருக்கின்றன. அடுக்குமாடிக் குடியிருப்புகளின் அளவுக்கு ஏற்றாற்போல அவற்றின் நுழைவாயில்கள் இல்லை. வீடுகளும் கடைகளும் முடிந்த அளவுக்கு நடைபாதைகளை ஆக்கிரமிக்கத் துடிப்பவை போலத் துருத்திக்கொண்டு வருகின்றன. சமீபத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட வடபழனி நூறடி சாலையைப் பார்த்தாலேயே பாதசாரிகள் மீது நமக்கு இருக்கும் அலட்சியம் விளங்கும். சர்வதேச நகரங்களுக்கு இணையாக வேகமாக வளர்ந்துவரும் சென்னை, பாதசாரிகளை, சைக்கிளில் செல்பவர்களை அலட்சியப்படுத்தும் இதயமற்ற நகரமாக மாறிவருகிறதா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

நல்ல நடைபாதைகளை உருவாக்கும்போதுதான், நல்ல ஜனநாயகத்தை உருவாக்க முடியும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in