

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைக்குள்ளான முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக சார்பில் 90 கிலோ மீட்டர் நீளத்துக்கு மனித சங்கிலி போராட்டம் நேற்று நடந்தது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் நீதிமன்றத்தில் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. அவரை உடனடியாக விடுதலைச் செய்யக்கோரி அதிமுக-வினர் தமிழகம் முழுக்க பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதன்ஒருபகுதியாக கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக சார்பில் நேற்று 90 கிலோ மீட்டர் நீளத்துக்கு மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது. கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் தொடங்கி கிருஷ்ணகிரி-வேலூர் மாவட்ட எல்லையான ஒப்பதவாடி கூட்டுரோடு வரை 90 கிலோ மீட்டர் நீளம் அதிமுகவினர் அணிவகுத்து நின்றனர். இதற்கு கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக செயலாளர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். இதில், அதிமுக-வினர் மட்டுமன்றி மாணவ, மாணவியரும் கலந்து கொண்டனர். மேலும், கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அசோக்குமார், கிருஷ்ணகிரி நகராட்சித் தலைவர் தங்கமுத்து உள்ளிட்ட அதிமுக-வினர் பலரும் கலந்து கொண்டனர்.
மனித சங்கிலியில் மணமக்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த சுரக்காயனப்பள்ளியைச் சேர்ந்த திம்மராயசாமி-கலாவதி இருவருக்கும் நேற்று காலை சூளகிரியில் திருமணம் நடந்தது. கழுத்தில் தாலி கட்டியதும் மணமக்கள் இருவரும் சின்னாறு பகுதிக்குச் சென்று மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.