

ஆரம்பத்தில் சாதாரணமாக மாநகர பஸ்களில் தாளம் போட்டுக்கொண்டு இருந்த கல்லூரி மாணவர்கள், இப்போது அரிவாள்களுடன் மோதிக் கொள்ளும் வகையில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
சமீபத்தில் வண்ணாரப்பேட்டையில் கல்லூரி மாணவர்கள் மாநகர பஸ்ஸில் மோதிக் கொண்டதில் அருகில் இருந்த பெண்ணுக்கும் வெட்டு விழுந்தது. இச்சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்படும் மோதலை தடுக்கவும், இணக்கமான சூழலை ஏற்படுத்தவும் கல்லூரி நிர்வாகங்களும் போக்குவரத்துத் துறையும் களமிறங்கியுள்ளன.
எஸ்.எம்.எஸ். தகவல்
இது தொடர்பாக பச்சையப்பன் கல்லூரி முதல்வர் டாக்டர் கலிவரதன் கூறியதாவது:
கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் இருக்கும்போது மோதல்கள் நடப்ப தில்லை. மாநகர பஸ்களில் வரும்போது, ஆங்காங்கே மோதல் ஏற்படுகிறது. இந்த ஆண்டில் பல்வேறு தவறுகளில் ஈடுபட்ட 13 மாணவர்களுக்கு டி.சி. கொடுத்து அனுப்பிவிட்டோம்.
கல்லூரி வளாகத்தில் 10 ஆசிரியர்கள் கொண்ட குழு தொடர்ந்து கண்காணிக்கிறது. கல்லூரிகளுக்கு வரும்போது, பஸ்களில் மாணவர்கள் செய்யும் 50 சதவீத தவறு கள் பெற்றோருக்கு தெரிவதில்லை. பெற்றோர்கள் மாணவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பெற்றோருக்கு கடிதம் அனுப்பினால், அதை மாணவர்கள் மறைத்து விடுகின்றனர். எனவே, எஸ்.எம்.எஸ். மூலம் மாணவர்களின் நடத்தை குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க வுள்ளோம்.
பிள்ளைகளின் நடத்தை குறித்து தெரிந்துகொள்ள, சம்பந்தப்பட்ட துறை தலைவர்களின் செல்போன் எண்களையும் பெற்றோருக்கு அளிக்கவுள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.
பஸ்களில் கண்காணிப்பு கேமரா
இது தொடர்பாக மாநில கல்லூரியின் முதல்வர் எம்.முகமது இப்ராஹிம் கூறியதாவது: கல்லூரிகளில் மாணவர்கள் சேரும்போதே, பஸ் ரூட்களில் வரும் முன்னாள் மாணவர்கள் குழுவில் சேரச்சொல்கின்றனர். பின்னர் அவர் களின் கட்டுப்பாட்டிலேயே வைத்துக் கொள்கின்றனர். திடீரென ஏதேனும் வன்முறை சம்பவம் ஏற்பட்டால், முன்னாள் மாணவர்கள் தப்பித்து விடுகின்றனர். இறுதியில் மாட்டிக் கொண்டு முழிப்பது முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர் கள்தான்.
எனவே, முதலில் பஸ் ரூட்டில் செல்லும் முன்னாள் மாணவர்களின் குழுவில் இருந்து, படிக்கும் மாணவர்களை மீட்க வேண்டும். நந்தனம், பச்சையப்பன், மாநில மற்றும் புது கல்லூரிகளில் அடிக்கடி தகராறில் ஈடுபடும் மாணவர்கள் என ஒவ்வொரு கல்லூரியிலும் 50 பேரை தேர்வு செய்து, அவர்களிடம் இணக்கமான சூழலை உருவாக்க வேண்டும். பாட்டு, கவிதை, விளையாட்டுப் போட்டிகளை நடத்தலாம். முக்கியமான மாநகர பஸ் ரூட்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும் என்றார்.
போலீஸில் புகார் அளிக்க உத்தரவு
மாநகர போக்குவரத்துக் கழகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மாநகர பஸ்களில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்படு கின்றன. மாணவர்களுக்கு போதிய ஆலோசனையும், அறிவுரையும் வழங்கு மாறு கல்லூரி நிர்வாகத்தினரிடமும் போலீஸாரிடமும் தெரிவித்துள்ளோம். மேலும் பஸ் செல்லும்போது, மாணவர்கள் மோதலில் ஈடுபட்டால், உடனே அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க ஓட்டுநர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம்’’ என்றார்.