

அந்தமான் நிகோபார் தீவில் ஞாயிற்றுக்கிழமை மாலை சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற படகு திடீரென விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட 22 பேர் உயிரிழந்தனர். 29 பேர் மீட்கப் பட்டுள்ளனர்.
இன்று காலை ஒரு உடல் மீட்கப்பட்டுள்ளதையடுத்து பலி எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. மீட்கப்பட்டவர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
தெற்கு அந்தமானில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், மும்பையைச் சேர்ந்த மற்றொரு குழுவினர், படகு ஊழியர் என 51 பேர் இந்த படகில் சென்றுள்ளனர். இவர்களில் 16 பெண்கள் உள்பட 32 பேர் பூஜா டிராவல்ஸ் என்ற சுற்றுலா நிறுவனம் மூலம் சென்றவர்கள். 25 பேர் மட்டுமே ஏற்றிச் செல்லக்கூடிய படகில் 51 பேர் சென்றது விபத்து ஏற்பட காரணமாக அமைந்து விட்டது.
ராஸ் தீவிலிருந்து வடக்கு விரிகுடாவுக்கு சென்றபோது விபத்து ஏற்பட்டு படகு மூழ்கியது. மீட்புப் பணியில் யூனியன் பிரதேச நிர்வாகத்தினரும் கடலோர காவல்படையினரும் ஈடுபட்டு உள்ளனர்.
மீட்கப்பட்டவர்கள் போர்ட் பிளேரில் உள்ள ஜி.பி.பந்த் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் இதே மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
அக்வா மெரைன் என்ற பெயருடைய இந்த படகின் கேபினில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
விபத்துக்குள்ளான படகு தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமானதாகும். விபத்து பற்றி கேள்விப்பட்டதும் சம்பவ இடத்துக்கு துணை நிலை ஆளுநர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) ஏ.கே.சிங் உடனடியாக விரைந்தார்.
சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தெற்கு அந்தமான் மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட்டுக்கு துணை நிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
உயிரிழந்தோர் குடும்பத்தின ருக்கு தலா ரூ.1 லட்சம் கருணைத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவிடம் விவரித்தார் துணை நிலை ஆளுநர். விபத்தில் சிக்கியவர்கள் பற்றி உறவினர்கள் தகவல் பெற கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்..
அதற்கான தொடர்பு எண் 1070, 03192-240127/230178/238881
ஜி.பி.பந்த் மருத்துவமனை தொடர்பு எண்: 03192-230629/ 9933274092.
உள்ளூர் தகவல் உதவி எண் 102.
பிரதமர் அதிர்ச்சி:
விபத்து குறித்து அதிர்ச்சி தெரிவித்த பிரதமர் மன்மோகன் சிங், உயிரிழந்தோரின் குடும்பத் தாருக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் அனைத்து மத்திய அமைப்புகளும் உடனடியாக ஈடுபட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டிருந்தார்.