

ஆலந்தூர் பரங்கிமலை ரயில் நிலையம் இடையே உள்ள குறுகிய சாலைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தை ஒட்டியே தில்லைகங்கா நகர், மடிப்பாக்கம் வழியாக வேளச் சேரி செல்ல இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலையை தினமும் பல ஆயிரக் கணக்கானோர் பயன்படுத்துகின்றனர்.
தற்போது, ஆலந்தூர் பரங்கிமலை இடையே மெட்ரோ ரயில்நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் மெட்ரோ ரயில் சேவையும் தொடங்கவுள்ளது. ஆனால், ஆலந்தூர் பரங்கிமலை வரையில் சுமார் 2 கி.மீ தூரத்துக்கு சாலைகள் மிகவும் குறுகியதாக உள்ளன. மேலும், கார், வேன் போன்ற வாகனங்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் நிறுத்தப்படுகின்றன. இதனால், அந்த வழியாக வாகனங்கள் சென்று வர கஷ்டமாக இருக்கிறது. எனவே, சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை விரிவுபடுத்த வேண்டுமென மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் சிலர் கூறுகையில், ‘‘கடந்த சில ஆண்டுகளாக ஆலந்தூர் ரயில் நிலைய சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வந்தன. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தற்போது, மெட்ரோ ரயில் பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையிலும், இந்த சாலை சீரமைக்காமல் மேடு, பள்ளமாக இருக்கிறது. மேலும், இந்த சாலையில் எப்போதும் வாகனங்கள் சாலைகளில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அலுவலக நேரங்களில் இந்த 2 கி.மீ தூரத்தை கடந்து செல்லவே சுமார் 20 நிமிடங்கள் ஆகிவிடுகிறது’’ என்றனர்.
இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘மெட்ரோ ரயில் பணிகளுக்காக சாலைகளில் தடுப்புகள் அமைத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது, ஒட்டுமொத்த பணிகளும் முடிவடைந்துள்ளன. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆலந்தூர் நகராட்சிக்கு அறிவுறுத்தியுள் ளோம். இதற்கான பணிகளை அவர்கள் விரைவில் தொடங்குவார்கள்’’ என்றார்.