

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலை வில் உள்ளது கோடநாடு. பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கோட நாடு காட்சிமுனைக்கு அருகே கடந்த 1992-ம் ஆண்டு, ஜெய லலிதா முதல்வராக இருந்த போது, சுமார் 900 ஏக்கர் பரப்பில் ரூ.17 கோடிக்கு கோடநாடு எஸ்டேட் வாங்கப்பட்டது. சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் எஸ்டேட் இயக்குநர்களாக உள்ளனர். அதன் பின்னர் இந்த எஸ்டேட் 1,600 ஏக்கராக விரிவாக்கப்பட்டது.
முதல்வராக இருந்தபோதும், இல்லாதபோதும் இங்கு தங்கி ஜெயலலிதா ஓய்வு எடுப்பார். சுமார் 5,000 சதுரஅடி பரப்பி லான பிரம்மாண்ட பங்களா, ஹெலி காப்டர் தளம், படகுக் குழாம், தேயிலை தொழிற்சாலை, எஸ்டேட்டை சுற்றிப்பார்க்க பேட்டரி கார்கள் ஆகியன எஸ்டேட்டின் அங்கமாக உள்ளன. எஸ்டேட் மற்றும் தொழிற்சாலை யில் சுமார் 500 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
ஜெயலலிதா தரப்பு, இந்த எஸ்டேட்டை வாங்கியதில் இருந்து கோடநாடு பகுதியில் கடும் கெடுபிடிகள் அரங்கேற்றப்பட்டன. எஸ்டேட்டில் 11 நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
கட்டிட விதிமீறல், அண்ணா நகர் மற்றும் காமராஜர் நகர் பகுதிக்குச் செல்லும் பாதை அடைக்கப்பட்டது என சர்ச்சைகளில் சிக்கி வந்த எஸ்டேட், சொத்துக் குவிப்பு வழக்கிலும் இணைக்கப்பட்டது. சசிகலா மற்றும் தினகரன் சிறை சென்றது, கடந்த 24-ம் தேதி நடந்த கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் ஆகியன எஸ்டேட் நிர்வாகத்தை சீர்குலையச் செய்துள்ளது.
இதை சமாளிக்க எஸ்டேட் மேலாளர் நடராஜ், தனது உறவினர்களை அழைத்து வந்து நிர்வாகத்தை கவனித்து வருகிறார். ஜெயலலிதா இறந்த பின்னர், சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டன. கொள்ளை சம்பவம் எஸ்டேட்டின் பாதுகாப்பை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது.
போலீஸ் விசாரணை மற்றும் கெடுபிடிகளால் கடும் மன உளைச்சலுக்கு கோடநாடு எஸ்டேட் தொழிலாளர்கள் ஆளாகியுள்ளனர். வெளி நபர்களிடம் பேசக் கூடாது என்று நிர்வாகம் விதித்துள்ள தடை உத்தரவால், மேற்பார்வையாளர்கள் யாரும் இல்லாத நேரத்தில் விரக்தியுடன் சில கேள்விகளுக்கு மட்டுமே பதில் அளித்தனர்.
அவர்கள் கூறும்போது, ‘‘தொடர்ந்து சர்ச்சைகளில் எஸ்டேட் சிக்கியுள்ளதால், தொழிலாளர்கள் மீதான கவனம் நிர்வாகத்துக்கு குறைந்துள்ளது. பாதுகாப்பு குறைந்துள்ளதால், எஸ்டேட் அருகே வசிக்கும் சிலர் அத்துமீறி உள்ளே நுழைந்து தேயிலை பறித்துச் செல்கின்றனர். சொத்துக் குவிப்பு வழக்கில் எஸ்டேட் இணைக்கப்பட்டுள்ளதால், ஜப்தி செய்யப்படும் என கூறப்படு கிறது.
ஜெயலலிதா உயிரிழந்து விட்டார். சசிகலாவும் சிறைக்குச் சென்று விட்டார். இதனால், நிர்வாகம் சீர்குலைந்துள்ளது. எங்களை தொடர்ந்து பணியில் வைப்பார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக இந்த எஸ்டேட்டை நம்பியே கோடநாடு, கெரடாமட்டம், சுண்டட்டி, ஈளாடா, கஸ்தூரிபா நகர், ஓம் நகர், எஸ்.கைக்காட்டி பகுதி மக்கள் வாழ்ந்து விட்டோம். இனி எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறிதான்’’ என்றனர்.
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது எஃகு கோட்டை யாக கோடநாடு திகழ்ந்தது. அவரது அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் நுழைவு எண் 9-ல் உள்ள அலுவலகம் வரை மட்டுமே செல்ல முடியும். அங்கும் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனை மட்டுமே சந்தித்துவிட்டு திரும்பிவிடுவர். ஆனால், இன்று கோடநாடு எஸ்டேட் நிலைகுலைந்து சிதைந்து விடும் நிலைக்குச் சரிந்து வருகிறது.