

ரிசர்வ் வங்கி மூலம் கடந்த 2005-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை பல்வேறு காலக்கட்டத்தில் வெளியிடப்பட்ட ரூ.10 நாணயம், வெவ்வேறு வடிவமைப்பில் வெளியிடப்பட்டதால், செல்லாத காசோ என மக்களிடம் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சேலம் பாராமஹால் நாணயவியல் சங்க பொதுச் செயலாளர் சுல்தான் கூறியுள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:
ரிசர்வ் வங்கி கடந்த 2005-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை பல்வேறு காலக்கட்டத்தில் ரூ.10 நாணயத்தை 12 விதமான வடிவமைப்புகளில் அச்சிட்டு வெளியிட்டுள்ளது. இதேபோல, ரூ.10 மதிப்புள்ள 14 சிறப்பு நாணயங்கள் அச்சடித்து வெளியிட்டுள்ளது. கடந்த நான்கு மாதமாக பொதுமக்களிடம் இருந்து ரூ.10 நாணயத்தை கடை, நிறுவனம், பேருந்துகள், வியாபார ஸ்தலங்களில் வாங்க மறுத்து வருகின்றனர்.
ரிசர்வ் வங்கியும் ரூ.10 நாணயம் செல்லும் என்றும் அதனை வாங்க மறுக்கக் கூடாது என தெரிவித்து இருந்தது. இதுகுறித்து ஆட்சியர் வா.சம்பத், ரூ.10 நாணயத்தை அனைத்து தரப்பு மக்களும் வாங்கி பயன்படுத்திட அறிவுறுத்தினார்.
ரூ.10 நாணயம் 12 விதமான வடிவமைப்புகளில் வெளியிட்ட நிலையில், ஒவ்வொரு நாணயத்திலம் வடிவமைப்பு மாறியுள்ளதால், கள்ளத்தனமாக அச்சடிக்கப்பட்ட நாணயமாக இருக்க கூடும் என பொதுமக்களும், வணிக நிறுவனம், வியாபாரிகளும் கருதி அதனை வாங்க மறுக்கின்றனர்.
தற்போது, புழக்கத்தில் உள்ள ரூ.10 நாணயம் அனைத்தும் செல்லத்தக்கதே. பல்வேறு வித வடிமைப்பில் ரூ.10 நாணயம் உள்ளதால், அதனை சந்தேகித்து வாங்காமல் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வெளியிடப்பட்ட விதவிதமான வடிமைப்புகளில் நாணயவியல் சேகரிப்பாளர் என்ற முறையில் நான் ரூ.10 நாணயத்தை சேகரித்து வைத்துள்ளேன். இதுகுறித்து மாவட்ட நிர்வாகமும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, தங்குதடையில்லாமல் ரூ.10 நாணயம் புழக்கத்தில் இருக்க வழி வகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.