

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை விடுதலை செய்ய வலியுறுத்தி ஈரோட்டில் அதிமுகவினர் 120 கி.மீ. தூரம் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி அதிமுகவினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஈரோடு மாவட்டம் காலிங்கராயன்பாளையத்தில் இருந்து, ஈரோடு, அரச்சலூர், காங்கேயம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மனக்கடவுவரை 120 கி.மீ. தூரத்துக்கு மனித சங்கிலி போராட்டம் நேற்று நடந்தது.
முன்னாள் அமைச்சர் கே.வி. ராமலிங்கம், அதிமுக மாவட்ட செயலாளர் கிட்டுசாமி, மேயர் மல்லிகா பரமசிவம், துணை மேயர் கே.சி.பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அத்துடன், மினி பேருந்து உரிமையாளர்கள் சங்கம், ஈரோடு மாவட்ட மெட்ரிக் பள்ளிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்பினரும், கருப்பு சட்டை, கருப்பு பேட்ஜ் அணிந்து பங்கேற்றனர்.
நகர்மன்ற தலைவி மொட்டையடித்து போராட்டம்
ஜெயலலிதாவை விடுதலை செய்ய வலியுறுத்தி திருச்செங்கோடு நகர்மன்ற பெண் தலைவி உள்பட 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கோயிலில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகர அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக கோயிலில் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தும் போராட்டம் நடைபெற்றது. திருச்செங்கோடு ஆறுமுகசாமி கோயிலில் திருச்செங்கோடு பெண் நகர்மன்ற தலைவி பொன்.சரஸ்வதி உள்பட 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் மொட்டை அடித்துக் கொண்டனர். பின், கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
அதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் முன்னாள் முதல்வருக்கு ஆதரவாக சிற்றுந்து உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் கிராமப்புறங்களுக்கு செல்லும் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.