10 ஆண்டில் இல்லாத அளவு தமிழகத்தில் மழை குறைவு

10 ஆண்டில் இல்லாத அளவு தமிழகத்தில் மழை குறைவு
Updated on
1 min read

வட கிழக்கு பருவ மழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை பெய்யும். இந்த காலத்தில்தான் தமிழ்நாடு, புதுச்சேரி, கடலோர ஆந்திரம் ஆகிய பகுதிகளில் அதிக மழை பெய்யும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழைக் காலம் முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வழக்கத்தை விட 30 சதவீதம் மழை குறைவாக பதிவாகியுள்ளது.

இதே பருவமழைக் காலத்தில் 2004-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை சராசரியை விட அதிக மழையும், 2009 முதல் 2011 வரை சராசரியான மழையும் பதிவானது. 2012-ல் 16 சதவீதம் மழை பற்றாக்குறை ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் ஓர் ஆண்டில் பெய்யும் மொத்த மழை அளவில் 48 சதவீதம் வட கிழக்கு பருவமழைக் காலத்திலேயே கிடைக்கிறது. இதில், கடலோர பகுதிகளுக்கு 60 சதவீதமும், மற்ற பகுதிகளுக்கு 40 சதவீதம் முதல் 50 சதவீதம் வரையும் மழை கிடைக்கும்.

இந்த ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி முதல் டிசம்பர் 18-ம் தேதி வரை 418 மி.மீ. மழை பெய்திருக்க வேண்டும். ஆனால், 294.3 மி.மீ. மட்டுமே பதிவாகியுள்ளது.

இதற்கான காரணத்தை விளக்கி இந்திய வானிலை ஆராய்ச்சித் துறையின் துணை இயக்குநர் ஒய்.இ.எ.ராஜ் கூறியதாவது:

அக்டோபர் மாதம் தொடங்கிய வட கிழக்கு பருவமழைக் காலத்தில் வங்கக் கடலில் தொடர்ந்து புயல் சின்னங்கள் உருவாகிக் கொண்டு இருந்தன. புயல் சின்னங்கள் மழை வாய்ப்பை அதிகரிக்கும் என்றாலும், இவை தவறான நேரத்தில், தவறான திசையில் நகர்ந்ததால் தமிழகத்துக்கு அதிக மழை கிடைக்கவில்லை.

இந்த பருவ காலத்தில் இதுவரை 5 முறை புயல் சின்னம் உருவாகி அவற்றில் நான்கு புயல்களாக மாறின. இதில் பைலின், ஹெலன், லெஹர் ஆகிய 3 புயல்கள் வடக்கு திசையில் ஆந்திரப் பிரதேசம், ஒடிசா நோக்கி நகர்ந்தன. சமீபத்தில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமும் அதன் பின் உருவான மாதி புயலுமே சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் மழை அளவை அதிகரித்துள்ளன.

இந்த நூற்றாண்டில் எப்போதும் இல்லாதது போல் 2004 முதல் 2011-ம் ஆண்டு வரை வட கிழக்கு பருவமழை பொய்க்காமல் தொடர்ந்து மழையை தந்தது. 2005-ல் சராசரியை விட 74% மழை அதிகமாக பதிவானது. சென்னையில் இந்த ஆண்டு இயல்பான மழை பெய்துள்ளது. கடலோர மாவட்டம் என்பதால் இது சாத்தியமாகியுள்ளது. நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையத்தில் கடந்த ஆண்டு 102 செ.மீ. மழையும், மீனம்பாக்கத்தில் 115 செ.மீ. மழையும் பதிவாகியது. இந்த ஆண்டு சற்று அதிகமாக நுங்கம்பாக்கத்தில் 109 செ.மீட்டரும், மீனம்பாக்கத்தில் 125 செ.மீ. மழையும் பதிவானது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in