

தடை செய்யப்பட்ட வெளிநாட்டு பட்டாசுகளை விற்பனை செய்வதை தடுப்பதற்காக, சுங்கத் துறை அதிகாரிகள் பட்டாசு கடைகள் மற்றும் கிடங்குகளில் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, சென்னை சுங்கத் துறை அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:
வெளிநாடுகளில் இருந்து மிகவும் அபாயகரமான பட்டாசுகளை கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த உளவுத்துறை தகவலையடுத்து, சென்னை சுங்கத்துறை அலுவலகம் சார்பில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பட்டாசுகள் மிகவும் அபாயகரமான ரசாயன வேதிப் பொருட்களால் தயாரிக்கப்படுகிறது. இவற்றை வெடிக்கும்போது விபத்துக்கள் நடக்க வாய்ப்புள்ளது. அத்துடன், சுற்றுச் சூழலுக்கும், உடல்நலத்துக்கும் கேடு விளைவிப்பதாக உள்ளது.
எனவே, இறக்குமதி செய்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள இவ்வகை வெளிநாட்டு பட்டாசுகள் விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்காக, சுங்கத் துறை அலுவலர்களை கொண்ட கண்காணிப்பு குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழுவினர் சென்னை மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள பட்டாசுகள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் கிடங்குகளில் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், தடை செய்யப்பட்ட இறக்குமதி பட்டாசுகளை பயன்படுத்த வேண்டாம் என சுங்கத் துறை சார்பில் பிரபல நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.