

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படும் கர்நாடக அரசுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்துக்கு காவிரியில் 27-ம் தேதிவரை தண்ணீர் திறக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபோதிலும், தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர் கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள னர். இதுதொடர்பாக அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முதல்வரின் நிலைப்பாடு என்ன?
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்:
கர்நாடக அரசு, எதிர்க்கட்சி, அங் குள்ள பல்வேறு கட்சிகள் ஒன்று சேர்ந்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்துள்ளனர். இதற்காக அனைத் துக்கட்சிக் கூட்டம், அமைச்சரவைக் கூட்டம் கூட்டியுள்ளனர். ஆனால், தமிழக முதல்வர் ஜெயலலிதா அனைத்துக்கட்சிக் கூட்டத்தை யும் கூட்டவில்லை. சட்டப்பேரவைக் கூட்டம் நடத்தும் முயற்சியிலும் ஈடுபட வில்லை. பிரதமரை சந்தித்து முறையிடுவதற்கான நிலையையும் ஏற்படுத்தவில்லை. எனவே, உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை தமிழக முதல்வர் வரவேற்கிறாரா, எதிர்க்கிறாரா என்பதை முதலில் விளக்க வேண்டும்.
பாடம் புகட்ட வேண்டும்
பாமக நிறுவனர் ராமதாஸ்:
கர்நாடக அரசு மற்றும் அங்குள்ள கட்சிகளின் செயல்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு சவால் விடும் வகையில் உள்ளன. காவிரி பிரச்சினையில் நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு வெளியான போது, அதை கர்நாடகம் ஏற்க மறுத்து அவசர சட்டம் பிறப்பித்தது. இதுகுறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கர்நாடக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. அதன் பிறகும், நாட்டில் அரசியலமைப்புச் சட்ட மோதலை ஏற்படுத்த கர்நாடக அரசு முயல்வதை மத்திய அரசு வேடிக்கை பார்க்கக்கூடாது. உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக செயல்படுவது எத்தகைய குற்றம் என்பதை உணர்த்தும் வகையில் கர்நாடக அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும். தமிழகத்துக்கு காவிரி யில் தண்ணீர் திறந்து விடப்படுவதை யும் உறுதி செய்ய வேண்டும்.
பிரதமரை சந்திக்க வேண்டும்
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ:
சிறுவாணி பிரச்சினையில் தமிழக உரிமை காக்க சட்டப் பேரவையில் முதல்வர் தீர்மானம் கொண்டுவந்தபோது, திமுக வரவேற்றது. அதுபோல, அனைத் துக்கட்சிக் கூட்டத்தை ஏற்பாடு செய்து, அதில் மேலாண்மை வாரியம் குறித்தும், கர்நாடகாவின் அக்கிரமத்தை தடுப்பது, அணை பாதுகாப்பு மசோதாவை தடுப்பது குறித்தும் முதல்வர் தீர்மானம் கொண்டுவந்தால் அனைத்து கட்சி யினரும் ஏற்றுக்கொள்வார்கள். மேலும், முதல்வர் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் சென்று பிரத மரை சந்தித்து தமிழகத்தின் நியாயத்தை வலியுறுத்தும்போது, இப்பிரச்சினையில் இதுவரை துரோகம் இழைத்த பிரதமர், நிலைமை விபரீதமாகக் கூடும் என்று உணர்வார். தமிழக நலன்களைப் பாதுகாக்க வேண் டிய பொறுப்பும், கடமையும் கொண்ட தமிழக முதல்வர் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதே சாலச் சிறந்தது என்று வலியுறுத்து கிறேன்.
மக்கள் நலனுக்கு குந்தகம்
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்:
சட்டத்தை மீறும் கர்நாடக அரசின் அநியாயப் போக்கை வேடிக்கை பார்க்காமல், நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு உடனே தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும். கர்நாடக அரசு 23-ம் தேதி சட்டப்பேரவை, மேலவை சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி தமிழகத்துக்கு தண்ணீர் தரா மல் இருக்க தீர்மானம் நிறைவேற்ற இருக்கிறது. இது உச்ச நீதிமன்ற அவமதிப்பு மட்டுமல்லாது, இரு மாநில மக்களின் நலனுக்கு குந்த கம் விளைவிக்கும் செயலாகும். இனியாவது தமிழக அரசு விழித் துக்கொண்டு நமது நியாயத்தையும், பலத்தையும் மத்திய அரசுக்கு நிரூ பிக்கும் வகையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி ஒருமித்த கருத்துடன் பிரதமர், குடியரசுத் தலைவரை சந்தித்து அழுத்தம் கொடுத்து, தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை உடனே பெற்றுத்தர வேண்டும்.
டெல்லிக்கு சென்று போராட்டம்
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன்:
தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கக் கூடாது என்றும், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக் குழு அமைக்கக் கூடாது என்றும் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா கூறிவருகிறார். மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமாபாரதி மற்றும் நீர்வளத் துறை ஆணையக அதிகாரிகளையும் அவர் மிரட்டுகிறார். இதை வன்மையாக கண்டிக்கிறோம். இதுபற்றி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர புகார் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்திய ஒற்றுமை, ஒருமைப்பாட்டை நிலைநிறுத்த மத்திய அமைச்சரவையில் இருந்து சதானந்த கவுடா நீக்கப்பட வேண் டும். இதை பிரதமரிடம் தமிழக முதல்வர் வலியுறுத்த வேண்டும். இந்த விஷயத்தில் தமிழக அரசு காலம் கடத்தினால், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் டெல்லிக்கு அழைத்துச் சென்று நீதி கேட்டு பிரதமர் வீட்டு முன்பு விரையில் போராட்டம் தொடங்குவோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.