Published : 10 Apr 2014 01:08 PM
Last Updated : 10 Apr 2014 01:08 PM

2 ஆண்டுக்கு முன் மாயமானவர் கொலை அண்ணனே தீர்த்துக்கட்டியது அம்பலம்

காஞ்சிபுரத்தில் இரண்டு ஆண்டுக்கு முன்னர் காணாமல் போனவர் கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததையடுத்து அவரது உடலை பாலாற்றுப்பகுதியில் போலீஸார் தேடி வருகின்றனர்.

காஞ்சிபுரம் வணிகர் வீதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயராஜன் (45). இவரது தம்பி செந்தில்ராஜன் (31). இருவரும் டீக்கடை மற்றும் லாரி புக்கிங் அலுவலகம் நடத்தி வந்தனர். இவர்களுக்கு 4 சகோதரிகள். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. கடந்த 2011-ம் ஆண்டு அக்டோபர் முதல் செந்தில்ராஜை காணவில்லை. அவரது அண்ணன் கார்த்திகேய ராஜனிடம் கேட்டபோது, வெளியூர் சென்றவர் வீடு திரும்பவில்லை என்று கூறி வந்தார்.

இந்நிலையில் காணாமல் போன செந்தில்ராஜனை அவரது அண்ணனே கூலிப்படை வைத்து கொலை செய்து பாலாற்றில் புதைத்தாக காஞ்சிபுரம் தாலுக்கா போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில், கார்த்தியேராஜனிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், சொத்து தகராறு காரணமாக 5 பேர் கொண்ட கூலிப்படையை வைத்து தம்பியை கொலை செய்து சடலத்தை பாலாற்றில் புதைத்திருப்பதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து, கொலையில் தொடர்புடைய 5 பேரையும் போலீஸார் பிடித்து விசாரித்துள்ளனர்.

அவர்கள் தெரிவித்த தகவல்களின் பேரில், செவிலி மேடு பாலாற்றுப் பகுதியில் பல்வேறு இடங்களில் புதன்கிழமை தோண்டிப் பார்த்தனர். எலும்பு கூட சிக்கவில்லை. 2 ஆண்டுகளுக்கு முன்பு இரவு நேரத்தில் போதையில் கொலை செய்து புதைத்ததால் சரியான இடத்தை தெரிவிக்க முடியவில்லை என்று பிடிபட்டவர்கள் போலீஸாரிடம் தெரிவித்தனர். அவர்கள் கூறிய இடங்களில் எல்லாம் போலீஸார் தோண்டிப் பார்த்துவிட்டு சடலம் சிக்காததால் ஏமாற்றமடைந்தனர்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x