

தமிழை உலகப் பொதுமொழியாக கொண்டுவர ஐ.நா. சபையில் இந்தியா வரைவு தீர்மானம் கொண்டுவர வேண்டும். இதற்கு தமிழகம், புதுச்சேரி எம்.பி.க்கள் 40 பேரும் பிரதமருக்கு அழுத்தம் தரவேண்டும் என்று குமரி அனந்தன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக காந்தி பேரவை தலைவர் குமரி அனந்தன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது:
பிரான்ஸுக்கு சென்றபோது உலகப்புகழ் பெற்ற லொவ்ரோ சித்திரக்கூடத்துக்குச் சென்றேன். பல நாடுகளில் இருந்து வந்திருந்த ஓவியர்கள் அங்கிருந்த மோனலிசா ஓவியத்தை கூர்ந்து நோக்கி ஆய்வு செய்தனர். அந்த ஓவியம் பற்றிய சிறுகுறிப்புகள் அதன் அடியில் எழுதப்பட்டு இருந்தன. அது பிரெஞ்சு மொழியில் மட்டுமே எழுதப்பட்டு இருந்ததால் என்னால் படிக்க முடியவில்லை. உலகப் பொதுமொழியாக ஒரு மொழி இருந் தால், அதை அனைவரையும் கற்க வைக்கலாம்.
ஒரு கருத்தை அவரவர் தாய் மொழியிலும், உலகப் பொது மொழியிலும் எழுதிவைக்கும்போது அதை அனைவராலும் புரிந்து கொள்ள முடியும். இதனால் உலக ஒருமைப்பாடும் உறவும் அமைந்து விடும்.
பிரான்ஸில் பெற்ற அனுபவத் தையும், மொழியால் பிற நாடுகளில் எனக்கு ஏற்பட்ட இடர்ப்பாடுகளையும் மனதில்கொண்டு, உலகப் பொது மொழி ஒன்று வேண்டும் என்று ஐ.நா. சபையின் கல்வி, அறிவியல், கலாச்சார அமைப்புக்கு (யுனெஸ்கோ), கடிதம் எழுதினேன். ஐ.நா. பொதுச்சபை கூட்டம் நடக்கும் போது இதற்கான வரைவு தீர்மா னத்தை இந்தியா கொண்டுவந்தால், அதை ஏற்று உலகப் பொதுமொழி உருவாக்கப்படும் என்று ஐ.நா.வில் இருந்து பதில் வந்தது.
ஐரோப்பா கண்டத்தில் பேசப் படும் ‘எஸ்பெரண்டோ’ என்ற மொழியை உலகப் பொதுமொழி யாக கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது. பல நாட்டு அறிஞர்கள் அதை ஏற்றுக்கொள்ள வில்லை. உலகில் வேறு எந்த மொழிக் கும் இல்லாத பல்வேறு சிறப்புகள் நம் தமிழுக்கு மட்டுமே இருக்கின்றன. உலகம் முழுவதும் தமிழ் மொழி பரவி இருக்கிறது. எனவே, தமிழை உலகப் பொதுமொழியாக கொண்டுவருவதற்கு ஐ.நா. சபை யில் இந்தியா வரைவு தீர்மானம் கொண்டுவர வேண்டும்.
இதுகுறித்து பிரதமருக்கு நான் பலமுறை கடிதம் எழுதியும் பதில் இல்லை. தமிழகம், புதுச்சேரியின் 40 எம்.பி.க்களும் சேர்ந்து பிரதமருக்கு அழுத்தம் கொடுத்து, உலகப் பொதுமொழியாக தமிழைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.