Last Updated : 24 Mar, 2014 12:00 AM

 

Published : 24 Mar 2014 12:00 AM
Last Updated : 24 Mar 2014 12:00 AM

தாம்பரம் தேசிய சித்த மருத்துவமனையில் கேரள முறையில் வாத நோய்களுக்கு வர்மம், மசாஜ் சிகிச்சை- பக்க விளைவுகள் இல்லாததால் சித்தாவுக்கு மாறும் நோயாளிகள்

சென்னை தாம்பரம் – சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் (அயோத்திதாச பண்டிதர் மருத்துவமனை) கேரள முறையில் வாத நோய்களுக்கு வர்மம், மசாஜ் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பக்க விளைவுகள் இல்லாததால், சித்த மருத்துவ சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தரமான சிகிச்சை, அனுசரிப்பு, பக்க விளைவுகள் இல்லாத மருந்து – மாத்திரைகளே சித்த மருத்துவ சிகிச்சைக்கு பொதுமக்கள் அதிக அளவில் செல்வதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

தாம்பரம் – சானடோரியத்தில் 2005-ம் ஆண்டு 14.73 ஏக்கர் பரப்பளவில் மிகவும் பிரம்மாண்டமாக தேசிய சித்த மருத்துவ நிறுவனம் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் தினமும் 200 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து, தற்போது தினமும் 2,500-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு செல்கின்றனர். உள்நோயாளிகளாக மட்டும் 180 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

6 துறை; 9 ஓபி

தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் பொது மருத்துவம், குணபாடம், சிறப்பு மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், நோய் நாடல், நஞ்சு நூலும் – மருத்துவ நீதி நூலும் என 6 துறைகளும் மற்றும் அதற்

கான 9 புறநோயாளிகள் பிரிவும் (ஓபி) செயல்படுகிறது. காய்ச்சல், தலைவலி, மஞ்சள் காமாலை தொடங்கி வாதம், சர்க்கரை நோய், சிறுநீரக பிரச்சினை, வயிறு-குடல் நோய், தோல் நோய் என அனைத்து விதமான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவை தவிர பல் மருத்துவம், கண் மருத்துவம் மற்றும் வாரத்தில் ஒரு நாள் முதியோர் மருத்துவப் பிரிவும் செயல்படுகிறது.

அறுவை சிகிச்சை

மூளை வளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகளுக்கு தனியாக சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மூலம் உள்ளிட்ட நோய்களுக்கு கத்தி இல்லாமல் அறுவை சிகிச்சையும் செய்யப்படுகிறது. அவசர சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சைக்கு வருபவர்களுக்கு முதல் கட்ட சிகிச்சை அளிப்பதற்காக தனி சிகிச்சை பிரிவு ஒன்றும் செயல்படுகிறது.

120 ஆண்டு வாழலாம்

இது தொடர்பாக தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் கே.மாணிக்கவாசகம், துணை மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் ராதிகா மாதவன் கூறியதாவது:

உணவே மருந்து, மருந்தே உணவு என்பதே சித்த மருத்துவத்தின் முக்கிய சிறப்பாகும். உணவு முறைகளும், நம்முடைய செயல்களுமே நோய்கள் வருவதற்கு முக்கிய காரணம். சித்த மருத்துவத்துடன் சரியான உணவு முறையை பின்பற்றினால் 120 ஆண்டுகள் வாழலாம் என்ற குறிப்புகள் உள்ளன.

வெளிநாட்டு நோயாளிகள் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் முதுநிலை சித்த மருத்துவ படிப்புக்காக தொடங்கப்பட்டது. இந்த அளவுக்கு நோயாளிகள் சிகிச்சைக்காக வருவார்கள் என நினைக்கவில்லை. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற வெளிநாடுகளில் இருந்தும் சிகிச்சைக்கு வருகின்றனர்.

80 வாத நோய்கள்

பக்கவாதம், கீழ் வாதம், முடக்கு வாதம் உள்ளிட்ட 80 வகையான வாத நோய்களுக்கு சிகிச்சை அளிக்கிறோம். கேரளத்தில் அளிக்கப்படும் சிகிச்சையைப் போல மசாஜ், வர்மம், மருத்துவம், பிசியோதெரப்பி போன்றவைகளால் சிகிச்சை அளிக்கிறோம். வாத நோயினால் பாதிக்கப்பட்டவரை ஒரு மண்டலம் (48 நாட்கள்) உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

எச்ஐவி நோயாளிகள்

எச்ஐவி, சர்க்கரை நோய், புற்றுநோய் மேலும் தீவிரமடையாமல் கட்டுக்குள் வைத்துக் கொள்வதற்கான சிகிச்சையும் அளிக்கிறோம். எச்ஐவி நோயாளிகள் சித்த மருத்துவத்தில் சிகிச்சை பெற்றால் நோயை கட்டுக்குள் வைத்துக் கொண்டு நீண்ட நாள் வாழலாம். யோகா, தியானம், உடற்பயிற்சி போன்றவைகளையும் நோயாளிகளுக்கு கற்றுக்கொடுத்து செய்யச் சொல்கிறோம்.கர்ப்பிணிகளுக்கு ஆலோசனைபெண்களுக்கு பிரசவம் பார்ப்பதில்லை. ஆனால், கர்ப்பிணி பெண்களுக்கு முதல் மாதம் தொடங்கி 10 மாதம் வரையும் மற்றும் குழந்தை பெற்ற பிறகும் என்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்று ஆலோசனைகளை வழங்குகிறோம். தமிழகத்தில் டெங்கு, சிக்குன்குனியாக தீவிரமாக இருந்தபோது, அதற்கென தனியாக புறநோயாளிகள் பிரிவு தொடங்கப்பட்டது. டெங்கு மற்றும் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நோயாளிகளை சித்த மருத்துவத்தின் மூலம் குணப்படுத்தியுள்ளோம்.

மதுவுக்கு அடிமை

குடி போதைக்கு அடிமையானவர்களை, அதிலிருந்து மீட்கும் ஆலோசனைகளும் சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன. மதுவுக்கு அடிமையான 25 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில் 20 பேர் குடிப் பழக்கத்தை விட்டுவிட்டு தற்போது திருந்தி வாழ்கின்றனர். அவர்களில் 3 பேர் இன்னும் மருத்துவமனையுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

5 லட்சம் பேர் சிகிச்சை

தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 5 லட்சம் பேர் புறநோயாளிகளாகவும், 56 ஆயிரம் பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்றுள்ளனர்.

வாரத்தில் ஒரு நாள் செயல்படும் முதியோர் சிகிச்சை பிரிவில் 16 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x