

சேனல் 4 தொலைக்காட்சியின் இயக்குநர் கெல்லம் மெக்ரேவுக்கு இந்தியா விசா தர மறுத்தது மலிவான தந்திரம் என்று திமுக தலைவர் கருணாநிதி சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு ஆதாரப்பூர்வமாக விடியோ எடுத்து சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டது. அந்தத் தொலைக்காட்சி நிறுவனத்தின் இயக்குநர் கெல்லம் மெக்ரே, இந்தியா வருவதற்கு விசா வழங்கக் கோரி 8 மாதங்களுக்கு முன்பே விண்ணப்பம் கொடுத்துள்ளார். ஆனால் இந்தியா விசா தர மறுத்துவிட்டது. இதை அவரே குறிப்பிட்டுள்ளார்.
தற்போது மீண்டும் இசைப்பிரியா கொலை செய்யப்பட்ட காட்சிகளை தில்லியில் வெளியிட நவ.6-ஆம் தேதி வருவதற்காக விசா கேட்டு விண்ணப்பித்துள்ளார். இந்த விண்ணப்பத்தையும் இந்திய அரசு நிராகரித்துள்ளது. இலங்கையில் போர்க் குற்றங்கள் நடந்தது உண்மை, போரின் போது மனிதாபிமானத்துக்கு எதிரான செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன என்று கெல்லம் கூறி வருகிறார்.
இந்நிலையில், அவருக்கு விசா தர மறுத்தது கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கையாகும். சீப்பை எடுத்து ஒளிய வைத்திடும் மலிவான தந்திரமுமாகும்" என்று கருணாநிதி சாடியுள்ளார்.
அதே அறிக்கையில், சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையில், ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞருக்கு, அரசு வழக்கறிஞர் பவானிசிங் ஆட்சேபணை தெரிவிக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவுக்கு எதிராக வாதாட வேண்டிய அரசு வழக்கறிஞர் பவானி சிங், இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இருக்கிறார் எனவே அவரை மாற்ற வேண்டுமென்று தி.மு.க., சார்பில் தொடரப்பட்ட வழக்கு இன்னமும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆனால், பவானி சிங்கை கர்நாடக அரசு பதவி நீக்கம் செய்தது செல்லாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது. அதன்படி, பவானி சிங் அரசு வழக்கறிஞராக தற்போது நீடிக்கிறார்.
அக்டோபர் 30ல் இந்த வழக்கு பெங்களூருவில் நடைபெற்றபோது, சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைக்க கேட்டிருக்கிறார். இதை எதிர்க்க வேண்டிய அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞரான பவானி சிங் தனக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை. அது ஏன் என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.