Last Updated : 24 Mar, 2017 11:23 AM

 

Published : 24 Mar 2017 11:23 AM
Last Updated : 24 Mar 2017 11:23 AM

உயர் மதிப்பு முத்திரை தாள் தட்டுப்பாடு எதிரொலி: உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் குறைந்தது

நீதிமன்ற கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அதற்கு ஏற்ப உயர் மதிப்பு முத்திரை தாள் கிடைக்காததால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கலாவது குறைந்துள்ளது.

தமிழகத்தில் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் வழக்குக ளுக்கான கட்டணம் முத்திரை தாளாகவும், ஸ்டாம்புகளாகவும் செலுத்தப்படுகிறது. வழக்கு தாக்கல் செய்வதற்கான கட்டணம் மார்ச் 1 முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை ரிட் மனுவுக்கு ரூ.200 ஆக இருந்த கட்டணம் ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உரிமை யியல் வழக்குகளுக்கான கட்டணம் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால் உயர்த்தப்பட்ட கட்டணத்துக்கு ஏற்ற மதிப்புடைய முத்திரை தாள் மற்றும் ஸ்டாம்புகளின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால், உயர் நீதிமன்ற கிளைக்கு போதுமான அளவு உயர் மதிப்பு முத்திரை தாள்கள் கிடைக்காததால் வழக்கு தாக்கலாவது குறைந்து வருகிறது.

குறைந்த மதிப்புடைய முத்திரை தாள்கள், ஸ்டாம்புகள் ஒட்டி வழக்கு தாக்கல் செய்யும்போது, ஒவ்வொரு ஸ்டாம்பு மீதும் சீல் பதிக்க வேண்டியிருப்பதால் உயர் நீதிமன்ற ஊழியர்கள் தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.

உயர் நீதிமன்ற கிளையில் ரிட் மனுக்களை பொறுத்தவரை தினமும் சுமார் 100 மனுக்கள் தாக்கலாகின்றன. இதற்கு ரூ.ஆயிரம் மதிப்பில் நூறு முத்திரை தாள் தேவை. ஆனால் ரூ.ஆயிரம் மதிப்புக்கு ரூ.40, ரூ.60 மதிப்புள்ள முத்திரை தாளுடன் வழக்குகள் தாக்கலாகின்றன.

இது தொடர்பாக முத்திரை தாள் விற்பனையாளர் ஒருவர் கூறியது:

தமிழகத்தில் முத்திரை தாளை பொறுத்தவரை ரூ.25 முதல் ரூ.5000 மதிப்பு வரையும், ஒரு ரூபாய் முதல் ரூ.20 வரை ஸ்டாம்புகளும் புழக்கத்தில் உள்ளன. மதுரை நகரில் வடக்கு, தெற்கு கருவூலம் அமைந்துள்ளது. வடக்கு கருவூலத்தில் இருந்து உயர் நீதிமன்ற கிளை, மாவட்ட நீதிமன்றத்துக்கு தேவையான முத்திரைதாள், ஸ்டாம்பு விநியோகம் செய்யப்படுகிறது. இந்த அலுவலகங்களில் போதுமான அளவு முத்திரை தாள், ஸ்டாம்பு கிடைப்பதில்லை.

மதுரை தெற்கு, வாடிப்பட்டி, மேலூர் ஆகிய கருவூலங்களில் உயர் மதிப்பு முத்திரை தாள்கள் அதிகளவில் இருப்பு உள்ளது. வடக்கு கருவூலத்தில் முத்திரை தாள் பற்றாக்குறை நிலவும்போது, தெற்கு, வாடிப்பட்டி, மேலூர் ஆகிய கருவூலங்களில் இருந்து உயர் மதிப்பு முத்திரை தாள்களை நீதிமன்ற தேவைக்காக வழங்க நடவடிக்கை எடுக்கலாம்.

உயர் நீதிமன்ற கிளைக்கு மட்டும் தினமும் ரூ.2 லட்சம் மதிப்புக்கு முத்திரை தாள்கள் தேவைப்படுகிறது. ரிட் மனு தாக்கல் செய்ய ரூ.ஆயிரம் மதிப்பு முத்திரை தாள் வழங்க வேண்டும். அந்த மதிப்புடைய முத்திரை தாள் இல்லாதபோது, அதற்கு பதிலாக ரூ.40, ரூ.60 மதிப்புடைய முத்திரை தாள் தலா 10 வீதம் சேர்த்து வழக்கு தாக்கல் செய்யப்படுகின்றன. இவற்றை சரிபார்த்து வழக்குகளை ஏற்பதில் பல சிரமங்கள் உள்ளன. இதன் காரணமாக உயர் நீதிமன்ற கிளையில் கடந்த 15 நாட்களாக வழக்குகள் தாக்கலாவது குறைந்துள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x