

சிவாஜி கணேசனின் சிலையை அகற்ற விரும்பினால், அதன் பலனை அவர்களே அனுபவிப்பார்கள் என்று திமுக தலைவர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, சிவாஜி கணேசன் சிலை விவகாரம் குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.
அப்போது, "கண்ணகி சிலையையே எடுத்தவர்கள் இப்போது என்னுடைய நண்பர் சிவாஜி கணேசனின் சிலையை எடுக்க விரும்பினால், அதன் பலனை அவர்களே அனுபவிக்கட்டும்" என்றார்.
முன்னதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று காவல் துறை கூடுதல் துணை ஆணையர் கே.சவுந்தரராஜன் தாக்கல் செய்த பதில் மனுவில், "கடற்கரை சாலையில் இருந்து வலதுபுறமாகத் திரும்பி ராதாகிருஷ்ணன் சாலைக்கு வாகனங்களில் செல்வோரும், ராதாகிருஷ்ணன் சாலையில் இருந்து சாந்தோம் நெடுஞ்சாலைக்கு செல்வோரும் அங்குள்ள சிவாஜி சிலை மறைப்பதால் பாதிக்கப்படுகின்றனர்.
அதேபோல் அங்குள்ள பாதசாரிகள் சாலையைக் கடக்கும் இடமும் சிவாஜி சிலையால் மறைக்கப்படுகிறது. அதனால், மக்கள் சாலையை கடப்பது தெரியாமல் வாகனங்கள் மோதும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன. கடந்த ஆண்டில் ஒரு உயிரிழப்பு சம்பவம் உள்பட மொத்தம் 12 விபத்துகளும், இந்த ஆண்டில் 8 விபத்துகளும் அங்கு நடந்துள்ளன.
மிகச் சிறந்த நடிகரான சிவாஜி கணேசன் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். தற்போதுள்ள இடத்தில் இருந்து சிவாஜி சிலையை அகற்றி மெரினா கடற்கரை எதிரே மற்ற சிலைகள் வைக்கப்பட்டுள்ளது போலவே வைக்கலாம். இதனால் போக்குவரத்துக்கு எவ்வித இடையூறும் இல்லாததோடு, வாகனங்களில் செல்வோரின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழகக் காவல் துறையின் இந்த நிலைப்பாட்டுக்கு, மதிமுக பொதுச் செயலர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.