

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தால், தமிழக மக்களின் கனவுகளை நனவாக்குவோம் என்று அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி கூறினார்.
பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் மாநில முதல்வருமான நரேந்திர மோடி ஒருநாள் பயணமாக இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் சென்னை வந்தார்.
மீனம்பாக்கம் விமான நிலையம் அருகே நடந்த பாஜக கூட்டத்தில் அவர் பேசும்போது, “திருச்சியில் சமீபத்தில் நடந்த பாஜக பொதுக் கூட்டத்தை மாபெரும் வெற்றி பெறச் செய்த பொது மக்களுக்கும், பாஜகவினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மாற்றத்துக்கான பேரலை தமிழகத்தில் இருப்பதாக வட மாநிலத்தவர்கள் நம்பவில்லை. ஆனால், நான் திருச்சி மாநாட்டை பார்த்தபோது அத்தகைய பேரலை தமிழகத்திலும் இருப்பது நன்றாகத் தெரிந்தது.
இந்திய மக்களின் கனவாக இருக்கும் காங்கிரஸ் அல்லாத இந்தியா என்ற மன நிலையை நான் உங்களிடம் காண்கிறேன். சென்ற வாரம் வந்த பைலின் புயல், வட மாநிலங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் இருந்தது. ஆனால், அந்தப் புயல் எதிர்பார்த்த பேரழிவை ஏற்படுத்தவில்லை. மாற்றத்திற்கான பாஜக பேரலை எழுந்து நிற்பதால், பைலின் புயலைத் தடுத்து நிறுத்திவிட்டது.
இந்த உலகமே எள்ளி நகையாடும் வகையில் 1000 டன் தங்கம் இருக்கிறது என்று யாரோ சொன்னதைக் கேட்டு, அதைத் தோண்டும் வேலையில் மத்திய அரசு ஈடுபட்டிருக்கிறது. நாட்டில் உள்ள மக்கள் பணத்தை கொள்ளையடித்து சுவிட்சர்லாந்து வங்கியில் போட்டு வைத்திருக்கும் கறுப்புப் பணத்தை கொண்டு வந்தாலே 1000 டன் தங்கத்தை விட அதிக மதிப்புடையதாக இருக்கும். எனவே, மத்திய அரசு அதைச் செய்தால், தங்கம் தோண்டும் வேலையைச் செய்ய வேண்டியதிருக்காது.
மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தால், தமிழக மக்களின் கனவுகளை நனவாக்குவதில் எந்தக் குறையும் இல்லாமல் செயல்படும். மக்களுக்கு சேவை செய்வது ஒன்றே பாஜகவின் கடமையாக இருக்கும். உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார் நரேந்திர மோடி.
நரேந்திர மோடியின் வருகையையொட்டி சென்னையில் வரலாறு காணாத போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.