

சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த நெடுஞ்சாலை துறை அமைச்சருக்கு தமிழக முதல்வராகும் வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில், உள்ளூரில் உற்சாக கொண்டாட்டம் ஏதும் களைக்கட்டாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் பெரும் அரசியல் மாற்றத்துக்கான புயல் கடந்த ஒரு வாரமாக வீசி கொண்டிருக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி மறைந்ததை அடுத்து, ஒரு மணி நேரத்தில் முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றுக் கொண்டார். முதல்வராக ஜெயலலிதா வழக்கு ரீதியாக சிறை வாசம் அனுபவித்த போதெல்லாம், தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வத்தையே அடையாளம் காட்டி சென்றார். அவர் மறைவுக்கு பின்னரும், ஓ.பன்னீர்செல்வமே முதல்வர் நாற்காலியை அலங்கரித்தார்.
இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், தோழி சசிகலா அரசியல் பிரவேசத்தால், அதிமுக-வின் அதிகார பதவியான பொதுச் செயலாளர் பொறுப்பை கைப்பற்றினார். அடுத்த சில வாரங்களில், முதல்வர் பதவிக்காக தன்னை முன்னிலைப்படுத்தி கொண்டு, ஆதரவு எம்எல்ஏ-க்கள் 134 பேரின் பட்டியலை, தமிழக ஆளுநரிடம் அளித்தார். முன்னதாக, முதல்வர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைத்தார்.
தமிழக அரசியலில் அடுத்தடுத்து திருப்புமுனையால் பொதுமக்களும், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பெரும் குழப்ப நிலைக்கு உள்ளாகினர். திடீரென, ஜெயலலிதாவின் சமாதியில் மவுன தியானத்தில் ஈடுபட்ட முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ராஜினாமா கடிதம் கட்டாயப்படுத்தி பெறப்பட்டதாக ஊடகங்கள் முன்பு மவுனம் கலைந்தார்.
இந்த அதிரடி திருப்பத்தை எதிர்பார்க்காத சசிகலா மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் ஓரணியில் திரண்டு நின்று, முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை தூற்ற ஆரம்பித்தனர்.
இதுபோன்ற சூழ்நிலையில், சசிகலா ஆதரவு எம்எல்ஏ-க்கள் கூவத்தூர் சொகுசுபங்களாக்களில் தங்க வைக்கப்பட்டனர். சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்ட நிலையில், உடனடியாக, அதிமுக எம்எல்ஏக்கள் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை, சட்டப்பேரவை குழு தலைவராக தேர்வு செய்து கவர்னருக்கு கடிதம் அனுப்பினர்.
எடப்பாடி பழனிச்சாமி சேலம், நெடுஞ்சாலை நகரில் உள்ள பங்களாவில் தங்கியுள்ளார். அமைச்சரான அவரது வீட்டுக்கு ஆயுதம் ஏந்திய ஒரு போலீஸாரும், உள்ளூர் காவல் நிலையத்தை சேர்ந்த நான்கு போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வர் பதவிக்கு நெடுஞ்சாலை துறை அமைச்சர் இடைப்பாடி பழனிச்சாமி பரிந்துரைக்கப்பட்ட நிலையில், உள்ளூரில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடவில்லை.
அதற்கு மாறாக மாவட்டம் முழுவதும், சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றதையே, அதிமுக-வினரும், பொதுமக்களும் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
எடப்பாடி பழனிசாமிக்கு, மேட்டூர் தொகுதி எம்எல்ஏ செம்மலை தவிர்த்து சேலம் மாவட்டத்தில் பிற எம்எல்ஏ-க்கள் அனைவரின் ஆதரவும் உள்ளது. இருந்தும், சேலத்தை சேர்ந்தவர் முதல்வர் பதவிக்கான வாய்ப்பு கிடைத்த நிலையில் ஒட்டு மொத்த மக்களும் வரவேற்று, கொண்டாடத்தில் ஈடுபடாமல் மவுனத்தில் ஆழ்ந்திருப்பது, அவருக்கான பின்னடைவே என அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.