

ஆசியா தெற்கு மண்டல அளவிலான பயிற்சிப் பட்டறையில் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி முதுகலை மாணவர் 5 சிறந்த ஆராய்ச்சியாளர்கள் பட்டியலில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
சிங்கப்பூரை சேர்ந்த இவோனிக் என்ற கடல்சார் நிறுவனம் ஆண்டுதோறும் பல்கலைக்கழக ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் விதமாக முதுகலை மாணவர்களின் ஆராய்ச்சிக்கு உதவி வருகிறது.
தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் உள்நாட்டு மீன்வளர்ப்பு துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் ப.அகிலன் வழிகாட்டுதலின் பேரில், முதுகலை மாணவர் இ.ஜெகன் மைக்கில் அன்ட்ரோ ஜீவகன் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார். இவர், மெத்தியோனின் மற்றும் திரியோனினை, உணவில் சேர்ப்பதன் மூலம் ஏற்படும் மாற்றம் குறித்து, தனது ஆராய்ச்சி கட்டுரையை சமர்ப்பித்தார்.
இக்கட்டுரை, 2016-ம் ஆண்டுக்கான ஆசிய தெற்கு மண்டல பல்கலைக்கழக மாணவர் ஆராய்ச்சிக்கு, இவோனிக் சிங்கப்பூர் நிறுவனத்தால் தேர்வு செய்யப்பட்டது. இந்த ஆராய்ச்சி, தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் இரண்டு மாதமாக மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து இவோனிக் நிறுவனத்தால் சிங்கப்பூரில் நடத்தப்பட்ட ஆசிய தெற்கு மண்டல பயிற்சிப் பட்டறையில் ஆராய்ச்சி முடிவுகள் சமர்ப்பிக்கப்பட்டன.
இந்த பயிற்சிப்பட்டறையில் இந்தியா, மலேசியா, வியட்நாம், தாய்லாந்து, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 23 மாணவர்கள் தங்களுடைய ஆராய்ச்சிக் கட்டுரை முடிவுகளை சமர்ப்பித்தனர்.
இதில், ஜெகன் மைக்கில் அன்ட்ரோ ஜீவகன் முதல் 5 இடத்தில் தேர்வு செய்யப்பட்டு, விருது பெற்றார். தேர்வு செய்யப்பட்ட 5 ஆராய்ச்சியாளர்கள் வரும் நவம்பர் மாதம் இவோனிக் நிறுவனத்தால் ஜெர்மனியில் நடத்தப்படும் உலகளவிலான பயிற்சிப்பட்டறையில் கலந்து கொள்ளவுள்ளனர்.
சாதனை படைத்த மாணவரை, கல்லூரி முதல்வர் கோ.சுகுமார் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.