Published : 25 Oct 2014 08:47 AM
Last Updated : 25 Oct 2014 08:47 AM

திருவாரூர் அருகே பரிதாபம்: டாஸ்மாக் மது குடித்த 3 தொழிலாளர்கள் பலி - மற்றொருவர் கவலைக்கிடம்; கிராம மக்கள் சாலை மறியல்

திருவாரூர் அருகே டாஸ்மாக் கடையில் வாங்கிய மது குடித்த 3 தொழிலாளர்கள் பலியானார்கள். இச்சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டம், வலங்கை மான் கீழ அமராவதி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் டீ மாஸ்டர் சேட்டு என்கிற ராமரத்தினம்(45), கூலித் தொழிலாளி தேவேந்திரன்(45), விவசாயி கஜேந்திரன்(40), செங்கரை குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த கொத்தனார் ஆனந்த்(35). நான்கு பேரும் நண்பர்கள்.

தீபாவளிக்கு முதல் நாள் வலங்கைமானில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையில் 360 மில்லி லிட்டர் அளவு கொண்ட 2 மது பாட்டில் களை ராமரத்தினம் வாங்கியுள்ளார். அதில் ஒன்றை தீபாவளியன்று நான்கு பேரும் குடித்துள்ளனர். மீதமிருந்த மற்றொரு பாட்டில் மதுவை நேற்று முன்தினம் இரவு, மீண்டும் நான்கு பேரும் சேர்ந்து குடித்துள்ளனர்.

சில நிமிடங்களில் 4 பேரும் வாந்தி, பேதி ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். பதற்றமடைந்த உறவினர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து, அதில் ஏற்றும்போதே ராமரத்தினம், தேவேந்திரன் ஆகியோர் அடுத் தடுத்து உயிரிழந்தனர். இருவரது உடல்களும் உடற்கூறு ஆய்வுக் காக கும்பகோணம் அரசு மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளன.

உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஆனந்த், கஜேந்திரன் ஆகியோர் கும்பகோணம் அரசு மருத்துவமனையிலிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத் துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். வழியில் ஆனந்த் உயிரிழந்தார். விவசாயி கஜேந்திரன் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து வலங்கைமான் போலீஸார் வழக்கு பதிவு செய்து, 3 பேர் பலியானதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தகவலறிந்த தஞ்சை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கு.தர்மராஜன், ஏடிஎஸ்பி ராஜேந்திரன், பாபநாசம் டிஎஸ்பி சிவாஜி அருட்செல்வன், திருவாரூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் வசுந்தராதேவி ஆகியோர் வலங்கைமான் கடைவீதியில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, மதுபானம் அருந்தி மூவர் உயிரிழந்த கீழஅமராவதி கிராமத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையில் சம்பந்தப்பட்ட அரசு மதுபானக் கடையில் இருந்த மது பாட்டில்களை, வள்ளி தலைமையிலான தடய அறிவியல் குழுவினர் பரிசோதனை மற்றும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.

கிராம மக்கள் சாலை மறியல்

அரசு மதுபானக் கடையில் வாங்கிய மதுவை குடித்து ஒரே கிராமத்தை சேர்ந்த மூன்று பேர் அடுத்தடுத்து பலியானதால் ஆத்திரமடைந்த கீழ அமராவதி கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு, அரசு மதுபான கடைகளில் போலி மதுபானம் விற்பதை தடுக்க வேண்டும், இச்சம்பவத்துக்கு காரணமான அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, கும்பகோணம்- மன்னார்குடி சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

உயிரிழப்புக்கு காரணமான டாஸ்மாக் கடையை அங்கிருந்து அகற்ற வேண்டும். இறந்த 3 பேரின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடைபெற்றது.

4 குழந்தைகளின் தந்தை

மது குடித்து உயிரிழந்த ராமரத்தினத்துக்கு மனைவி இந்திராணி, மகள்கள் துவிதா, ரஞ்சிதா, துர்காதேவி, மகன் கோகுலகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர். தேவேந்திரனுக்கு மனைவி இந்திராணி மற்றும் 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். உயிரிழந்த ஆனந்துக்கு மனைவி அம்பிகா மற்றும் ஒரு மகன் உள்ளனர். உயிருக்குப் போராடும் கஜேந்திரனுக்கு மனைவி கவிதா மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

போலியானதா?

வலங்கைமான் டாஸ்மாக் கடை யில் வாங்கப்பட்ட மது, காரைக் காலிலிருந்து வாங்கி வரப்பட்ட எரி சாராயம் கலக்கப்பட்ட போலி மதுவாக இருக்கலாம் என்று பொது மக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே போலீஸ் அணுகுமுறையும் இருப்பதாகக் கூறப்படுகிறது. ராமரத்தினத்தின் மனைவியிடம் விசாரணை செய்த போலீஸார், அவரது கணவர் மது பாட்டிலில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார் என எழுதித் தரும்படி நிர்பந்தம் செய்து வருவதாகவும், இதை ராமரத்தினத்தின் உறவினர்கள் ஏற்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

4 பேரும் சேர்ந்து மது குடித்தபோது, மது காரமாக இருப்பதாகக் கூறி கஜேந்திரன் ஒரு முறை (ரவுண்டு) குடித்ததோடு நிறுத்திக்கொண்டாராம். மற்ற 3 பேரும் தொடர்ந்து குடித்ததால் உயிரிழப்பு ஏற்பட்டதாகக் கூறப் படுகிறது.

10 நாட்களுக்கு முன் முசிறியில் மூவர் பலி

திருச்சி மாவட்டம், முசிறியில் டாஸ்மாக் மதுபானக் கடையில் மது அருந்திய மூவர் அக்டோபர் 13-ம் தேதி இரவு உயிரிழந்தனர். முசிறி, தாத்தையங்கார்பேட்டை பகுதியைச் சேர்ந்த பொதுப்பணித் துறையில் தினக்கூலிப் பணியாளராக வேலை பார்த்து வந்த கணபதி என்கிற கணேசன்(37). இவரது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான செல்வம் (35), கூலித் தொழிலாளியான கணேசமுருகன்(39) ஆகியோர் முசிறி பழைய பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் மதுபான பாரில் மது அருந்திவிட்டு வெளியே வந்தபோது ஒவ்வொருவராக மயங்கி விழுந்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முசிறி காவல் நிலைய ஆய்வாளர் வேலு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். இதில் குடும்பப் பிரச்சினை காரணமாக கணேசன் மதுவில் விஷம் கலந்து குடித்ததாகவும், இதையறியாத மற்ற இருவரும் அதே மதுவை குடித்ததால் இறந்துவிட்டனர் என்றும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரித்தபோது, உட்கொண்ட உடனேயே உடல் முழுவதும் பரவி மரணத்தை ஏற்படுத்தக் கூடிய வேதிப் பொருட்களில் முக்கியமானது சயனைடு. இந்த வகையிலான விஷத்தைத்தான் மதுவில் கலந்து மூவரும் குடித்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் விஷத்தால்தான் மரணம் ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது என்றனர்.

பிரேத பரிசோதனை விவரங்களை நாங்கள் வெளியே சொல்லக் கூடாது. விஷத்தால்தான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், கெமிக்கல் ரிப்போர்ட் கிடைத்த பிறகே எந்த வகையான விஷம் என்பது தெரியவரும் என்றார் முசிறி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் செல்வக்குமார்.

குடும்பத்தினரே விஷம் கலந்திருக்கலாம்: காவல் துறை உயர் அலுவலர் தகவல்

“வலங்கைமான் டாஸ்மாக் கடையில் விற்கப்பட்ட மற்றும் இருப்பில் உள்ள மதுபாட்டில்கள் அனைத்தும் தரமானவையே. மது பாட்டிலை வாங்கி வைத்திருந்த ராமரத்தினத்துக்கு குடும்பப் பிரச்சினைகள் உள்ளன. அவரைக் கொல்லும் நோக்கில் குடும்பத்தில் யாரேனும் விஷம் கலந்து வைத்திருந்திருக்கலாம். அதை குடித்த அவரும், மற்றவர்களும் உயிரிழந்திருக்கலாம். குறிப்பிட்ட அந்த மதுபாட்டில் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் உள்ள மண்டல தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. சனிக்கிழமை அறிக்கை கிடைத்துவிடும். விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என காவல்துறையைச் சேர்ந்த பெயர் தெரிவிக்க விரும்பாத உயர் அலுவலர் ஒருவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x