Published : 18 Aug 2016 07:47 AM
Last Updated : 18 Aug 2016 07:47 AM

கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் சம்பளம் வழங்க முடியாத நிலைக்கு கடந்த திமுக ஆட்சியே காரணம்: பேரவையில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குற்றச்சாட்டு

சட்டப் பேரவையில் நேற்று நடை பெற்ற வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் எஸ்.ரகுபதி (திருமயம் தொகுதி) பேசியபோது நடைபெற்ற விவாதம் வருமாறு:

திமுக உறுப்பினர் எஸ்.ரகுபதி:

ஏழைகளுக்கு வீடுகள் கட்டும் திட்டத்தை அறிவிக்கிறீர்கள். நிலப் பிரச்சினை தொடர்பாக குறித்த காலத்தில் அந்த வீடுகள் கட்டி முடிக்கப்படுவதில்லை.

வீட்டு வசதித் துறை அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன்:

2006-11 இடைப்பட்ட ஆண்டுகளில் திமுக ஆட்சியில் 20 ஆயிரத்து 802 வீடுகள் மட்டுமே கட்டப்பட்டன. ஆனால், அதிமுக ஆட்சியில் 1 லட்சத்து 84 ஆயிரத்து 138 வீடுகள் கட்டப்பட்டன. 2011-16 இடைப்பட்ட காலத்தில் 1 லட்சம் வீடுகள் கட்ட திட்டமிட்டு, 59 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுவிட்டன. மீத முள்ள 41 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்படும் நிலையில் உள்ளன.

உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி:

திமுக ஆட்சி யில் 6 லட்சம் வீடுகள் கட்ட திட்டமிட்டு, 3 லட்சம் வீடுகள் மட்டும் கட்டப்பட்டன. மீதமுள்ள 3 லட்சம் வீடுகளைக் கட்டி முடிக்க முதல்வர் ஜெயலலிதாதான் ரூ.490 கோடி ஒதுக்கினார். கடந்த 5 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை மூலம் 12 லட்சத்து 33 ஆயிரத்து 762 வீடுகள் கட்டப்பட்டன.

திமுக உறுப்பினர் எஸ்.ரகுபதி:

825 கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் 30 மாதங்களுக்கும் மேலாக சம்பளம் வழங்கப்படவில்லை. ரூ.40 கோடி வரை சம்பள பாக்கி நிலுவையில் உள்ளது. அதனால் அந்த கூட்டுறவு சங்க ஊழியர்களின் குடும்பம் பெரிதும் அவதிப்படுகிறது.

கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ:

கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் இந்த நிலைக்கு திமுக ஆட்சியில் நடந்த நிர்வாக முறைகேடுகளே காரணம். இந்த நிலையைப் போக்க நஷ்டத்தில் இயங்கும் சங்கங்களை லாபத் தில் இயங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்:

கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் நிலைக்கு திமுகதான் காரணம் என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்கத் தயாரா?

அமைச்சர் செல்லூர் கே.ராஜூ:

சட்டவிதிகளை மீறி சங்கங்கள் செயல்பட்டது, வரவுக்கு அதிகமாக செலவு செய்தது, புதிதாக நிதி திரட்ட முடியாமல் போனதற்கான காரணம் உள்ளிட்டவற்றை ஆதாரத்துடன் நிரூபிக்க முடியும்.

திமுக உறுப்பினர் எஸ்.ரகுபதி:

கடனுக்கான வட்டியும், அசலும் செலுத்திய பிறகும் பலருக்கு இன்னமும் வீட்டு அடமானப் பத்திரம் வழங்கப்படவில்லை.

அவை முன்னவர் ஓ.பன்னீர் செல்வம்:

திமுக ஆட்சியில் கடனுக்கான வட்டியும், அசலும் செலுத்தியபோது அந்த தொகை கூட்டுறவு சங்க ஊழியர்களின் சம்பளத்துக்காக பயன்படுத்தப் பட்டது. கடனுக்கான வட்டி, அசல் செலுத்திய 10 ஆயிரம் பேரின் விவரம் மாநில கூட்டுறவு சங்கத் தில் பதிவாகவில்லை. அதனால் தான் அவர்களுக்கு வீட்டு அடமானப் பத்திரம் வழங்கப்பட வில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x