

சென்னை விமான நிலையத்தில் 6 மாதத்தில் 250 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என சென்னை மண்டல சுங்கத்துறை தலைமை ஆணையர் எஸ்.ரமேஷ் தெரிவித்தார்.
சென்னை மண்டல சுங்கத்துறை சார்பில், சென்னை விமான நிலைய பன்னாட்டு முனையத்தில் சுங்கத்துறை உதவி மையம் திறப்பு விழா நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை மண்டல சுங்கத்துறை தலைமை ஆணையர் எஸ்.ரமேஷ் சுங்கத்துறை உதவி மையத்தை திறந்து வைத்து, விமானப் பயணிகளுக்கான கையேட்டை வெளியிட்டார்.
பின்னர், அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 24 மணி நேரமும் செயல்படும் சுங்கத்துறை உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. பயணிகளின் சந்தேகங்களுக்கு, அதிகாரிகள் தெளிவாகவும், புரியும்படியும் விளக்கம் அளிப்பார்கள். பயணிகளை அணுகும் முறை, அவர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் முறை தொடர்பான பயிற்சிகள் அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இவை தவிர, சுங்கத்துறை சார்பில் 20 பக்கங்கள் கொண்ட சிறிய கையேடு இலவசமாக பயணிகளுக்கு வழங்கப்பட உள்ளது. அந்த கையேட்டில் பொருட்களுக்கு சுங்கவரி கட்டணம் எவ்வளவு, வெளிநாடுகளில் இருந்து எவ்வளவு தங்கத்தை கொண்டு வருவதற்கு அனுமதி இருக்கிறது. மேலும் அனுமதிக்கப்பட்ட மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்கள் குறித்த அனைத்து விவரங்களும் இடம் பெற்றுள்ளன.
சென்னை விமான நிலையத்தில் கடந்த ஆண்டில் (2013-14) ரூ.55 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்களில் மட்டும் ரூ.71 கோடி மதிப்புள்ள 250 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு தங்கக் கடத்தல் அதிகரித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுங்கத்துறையில் தேவையான பணியிடங்களை அதிகரிக்கவும் திட்டமிட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த விழாவில் சுங்கவரி, கலால்வரி மற்றும் போதைப் பொருள் ஒழிப்புக்கான தேசிய அமைப்பின் கூடுதல் பொது இயக்குநர் பொன்னுசாமி, சென்னை விமான நிலைய சுங்கத்துறை கூடுதல் ஆணையர் யமுனா தேவி, இணை ஆணையர்கள் மணி, ஜெக் ராம் மீனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.